முத்தரையர் பாளையத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஆயிகுளம் கழிவுநீர் குட்டையாக மாறியது நிரந்தர தீர்வு எப்போது?

புதுச்சேரி :  புதுச்சேரியில் வரலாற்று சிறப்பு மிக்க ஆயி குளம், தற்போது கழிவுநீர் குட்டையாக மாறியுள்ளது. இதனை தூர்வாரி கழிவுநீர் கலக்காமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  16ம் நூற்றாண்டில் (கி.பி.1509 - 1530) விஜய நகர பேரரசராக இருந்த கிருஷ்ண தேவராயர் வேலூர் பயணத்தை முடித்துவிட்டு உழவர்கரையில் இருந்த தனது ஆதரவாளர் உய்யகுண்ட விசுவராயரை பார்க்க வந்தார்.

அப்போது முத்தரையர் பாளையத்தில் இருந்த மாளிகையை கோயில் என நினைத்து கிருஷ்ண தேவராயர் வணங்கினார். பின்னர் இது தாசியின் வீடு என தெரிந்தவுடன் மாளிகையை இடிக்க உத்தரவிட்டார். தான் ஆசையாக கட்டிய மாளிகையை தானே இடிப்பதாகவும், அதற்கு கால அவகாசம் வேண்டுமென்று மன்னரிடம் தேவதாசியான ஆயி மன்றாடினார். அதை மன்னர் ஏற்றார். இதையடுத்து மாளிகையை ஆயி இடித்ததுடன், அந்த இடத்தில் தனது செல்வத்தை கொண்டு மக்களின் குடிநீர் தேவைக்காக குளத்தை உருவாக்கினார்.

 தொடர்ந்து, 18ம் நூற்றாண்டில் புதுவையில் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். அப்போது தண்ணீர் பிரச்னையை தீர்க்க அப்போதைய கவர்னர் போன்டெம்ப்ஸ், பிரான்சில் ஆட்சி செய்த அரசருக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து மூன்றாம் நெப்போலியன் உத்தரவின் பேரில் பொறியாளர் லாமைரெஸ்சே புதுச்சேரி வந்தார். புதுவையில் எங்கு குடிநீர் கிடைக்கிறது என்று ஆய்வு செய்தபோது, ஆயி குளம் அவரது கண்ணில் பட்டது. அப்போது, இந்த குளம் பற்றிய வரலாற்றையும் அவர் கேட்டறிந்தார். அதன் பிறகு, ஆயி குளத்தில் இருந்து நீளமான வாய்க்கால் வெட்டப்பட்டு, அதன் மூலம் புதுவை நகருக்கு தண்ணீர் வந்தது. மேலும், ஆயியின் சிறப்பை வியந்து அவரது நினைவாக பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியில் பாரதி பூங்காவில் ஆயி மண்டபமும் கட்டப்பட்டது.

 இவ்வளவு சிறப்புமிக்க ஆயி குளம் இன்று படுமோசமாக உள்ளது.  தற்போது குளத்தில் கழிவுநீருடன் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் மிதக்கின்றன. இந்த குளத்தின் அருகே செல்லும் கழிவுநீர் வாய்க்கால்தான் நேரடியாக கனகனேரிக்கும் செல்கிறது. இவ்வழியாக செல்லும் கழிவுநீர் குளத்தில் கலப்பது மட்டுமல்லாமல் கனகனேரிக்கும் செல்கிறது.

 இதுகுறித்து செம்படுகை நன்னீரகம் அமைப்பின் தலைவர் ராமமூர்த்தி கூறுகையில், புதுச்சேரி முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கிய ஆயி குளத்தில் 15 ஊரின் கழிவுகள் வந்து கலக்கிறது. இந்த குளத்தை சுற்றியுள்ள பகுதியில் 16 போர்வெல்கள் போடப்பட்டுள்ளது. மழை காலங்களில் குளம் நிரம்பினால், 2 நாட்களில் குளத்தில் இருந்து மழைநீர் ரிசார்ஜ் முறையில் வற்றிவிடும். மழை காலத்திற்கு பிறகு குளத்திற்கு தொடர்ந்து வரும் கழிவுநீர்தான் தற்போது ரீசார்ஜ் ஆகி வருகிறது. இது மிகவும் கொடுமையான விஷயம்.

அதேபோல், இப்பகுதிக்கு அருகே புறம்போக்கு இடத்தில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேற வசதியில்லை. இதனால் அந்த கழிவுநீரும் குளத்தில் விடப்படுகிறது. அருகிலேயே பொதுப்பணித்துறை அதிகாரிகள் இருந்தும் குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வரலாற்று சிறப்புமிக்க ஆயி குளம், கழிவுநீர் குட்டையாக மாறியுள்ளது. இந்த குளத்தில் உள்ள கழிவுநீர் தான் தினமும் ரீசார்ஜ் ஆகி நகரப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. புதுவை அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் குளத்தை தூர்வாரி கழிவுநீர் கலக்காமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

 இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, `குளத்தின் அருகே செல்லும் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்து கசிந்து கழிவுநீர் குளத்தில் கலக்கிறது. தற்போது மணல் மூட்டைகளை அடுக்கி கழிவுநீர் கலக்காமல் தடுத்துள்ளோம்’ என்றனர்.

Related Stories: