வரையாடு இனப்பெருக்க காலம் தொடங்குவதால் இரவிகுளம் தேசியப் பூங்கா 31ல் மூடல்

மூணாறு :  வரையாடு இனப்பெருக்க காலம் தொடங்குவதையொட்டி, கேரள மாரிலம் மூணாறில் உள்ள இரவிகுளம் தேசியப் பூங்கா வரும் 31ம் தேதி மூடப்படுகிறது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இரவிகுளம் தேசியப் பூங்காவிற்கு செல்வர். இப்பகுதியில் வரையாடுகள் அதிகமாக இருக்கும். இந்நிலையில், வரையாடுகளின் இனப்பெருக்க காலம் தொடங்க உள்ளது. பூங்காவின் வனப்பகுதியில் கடந்த தினம் 3 வரையாடு குட்டிகள் பிறந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்ட பூங்கா, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து, மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் மூணாறு மற்றும் தேசியப் பூங்காவில் குவிந்தனர்.

இந்நிலையில், வரையாடுகளின் இனப்பெருக்க காலம் நெருங்கி வருவதால், பூங்கா மீண்டும் மூடப்படுகிறது. வரையாடுகளின் இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு காரணமாக தலைமை வனஉயிரின காப்பாளரின் அறிவுறுத்தலின்பேரில், பூங்காவை மூட முடிவு செய்துள்ளதாக, ரேஞ்ச் அதிகாரி ஜோப் நரியம்பரம்பில் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 142 வரையாடு குட்டிகள் பிறந்தன. இம்முறை கடந்த ஆண்டை விட அதிகமான வரையாடு குட்டிகள் பிறக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூன்று மாதம் பூங்கா மூடப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் இயற்கையின் அழகை ரசித்து, வரையாடுகளை காண முடியாது.

Related Stories: