மூலிகை பயன்பாட்டிற்காக முருங்கை இலை பறிக்கும் பணி தீவிரம்-கிலோ ரூ.80 முதல் 90 வரை விற்பனை

வருசநாடு :  கடமலை-மயிலை ஒன்றியத்தில் மூலிகை பயன்பாட்டிற்காக முருங்கை இலை பறிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கிலோ விலை ரூ.80 முதல் 90 வறை விற்பனையாகிறது. கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள கண்டமனூர், எட்டப்பராஜபுரம், கணேசபுரம், கோவிந்தநகரம், கடமலைக்குண்டு, பாலூத்து, கொம்புகாரன்புலியூர், அய்யனார்கோவில், அய்யனார்புரம், டாணா தோட்டம், அண்ணாநகர், ஆத்தங்கரைபட்டி, லட்சுமிபுரம், மயிலாடும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் முருங்கை சாகுபடி அதிகளவில் உள்ளன.

 இந்நிலையில், மூலிகை பயன்பாட்டிற்காக முருங்கை மரங்களிலிருந்து இலை பறிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது ஒரு கிலோ முருங்கை இலை ரூ.80 முதல் 90 வரை விலை போவதாக கூறுகின்றனர். தேனி, ஆண்டிபட்டி, கம்பம், மதுரை, திண்டுக்கல், பாண்டிச்சேரி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் முருங்கை இலைகளை வாங்கி, வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதாக தெரிவிக்கின்றனர். முருங்கை இலைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேலும், விவசாயிகளின் வருவாய் பெருக்கத்திற்கு முருங்கை சாகுபடி பயன்படுவதாக தெரிவித்துள்ளனர். இதனால், கடமலை-மயிலை ஒன்றியத்தில் தற்போது முருங்கை இலை பறிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Related Stories: