தாவரவியல் பூங்கா புல் மைதானங்கள் மூடல்-ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலா பயணிகள்

ஊட்டி : தாவரவியல் பூங்கா புல் மைதானங்கள் மூடப்பட்டுள்ளதால் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பணிகளில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவிற்கு செல்வது வழக்கம். இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள மலர்களை கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, பூங்காவில் உள்ள பெரிய மற்றும் சிறிய புல் மைதானங்களில் வெகுநேரம் அமர்ந்தும், விளையாடி செல்வது வழக்கம்.

குறிப்பாக, குழந்தைகளுடன் வரும் சுற்றுலா பயணிகள் இந்த புல் மைதானங்களில் ஓடி,ஆடி விளையாடுவது வழக்கம். கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக தற்போது ஊட்டி தாவரவியல் பூங்காவில் மக்கள் அதிகம் கூடாத வகையில் பெரிய புல் மைதானம் உட்பட அனைத்து புல் மைதானங்களும் மூடப்பட்டுள்ளன. மேலும், முதல் சீசனுக்காக பூங்காவை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பூங்காவி்ல மலர்களும் இல்லை. எனவே, பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் நடைபாதைகளில் மட்டுமே செல்ல தற்போது அனுமதிக்கப்படுகிறது. புல் மைதானங்களுக்குள் செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Related Stories: