மயிலாடுதுறை : திருடப்பட்ட 4 பவுன் நகையை குத்தாலம் போலீசார் மீட்டுதரவில்லை என்று கூறி மூதாட்டி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணி போலீசார் தடுத்து நிறுத்தினர்.மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு குத்தாலம் ராஜகோபாலபுரம் மேலசாலைத் தெருவைச் சேர்ந்த சாமிநாதன் மனைவி கமலா (60) என்பவர் பையில் வாட்டர் பாட்டிலில் மண்ணெண்ணையுடன் வந்து தீக்குளிக்க போவதாக கூறி கூச்சலிட்டார். இதனையறிந்த பாதுகாப்பு போலீசார் கமலாவிடம் இருந்த மண்ணெண்ணை பாட்டிலை அப்புறப்படுத்தினர்.
அப்போது கமலா தனக்கு தீர்வு கிடைக்காததால் தீக்குளிக்க போகிறேன் என்னை விடுங்கள் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து கமலாவை போலீசார் சமாதானம் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக கமலா கூறுகையில், கணவர் இறந்துபோன நிலையில், குத்தாலத்தில் தனியாக வசித்து வருகிறேன்.கடந்த 2017 ஜூன் 2ம் தேதி இரவு என்னிடமிருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.41 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து குத்தாலம் போலீஸ் நிலையத்தில் என்னிடம் திருடிச் சென்றவர்களின் பெயரைக் குறிப்பிட்டு புகார் அளித்திருந்தேன். திருடியவர்கள் மீது வழக்கும் போடவில்லை.இதுகுறித்து தஞ்சை டிஐஜி, மாவட்ட காவல் கண்காகணிப்பாளர் என பலரிடம் புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் திருடியவர்கள்மீது புகார் மனு கொடுத்தேன். வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் கூறியும் அவர்கள் செய்யவில்லை என்பதால் மன உளைச்சலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செயததாக தெரிவித்தார். தொடர்ந்து தனது புகாரை மனு பெட்டியில் போட்டுசென்றார்.