கே.வி.குப்பம் அருகே 5 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தாமல் பாழடையும் பொதுக்கழிப்பிடம்-பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை

கே.வி.குப்பம் :  கே.வி.குப்பம் அருகே 5 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தாமல் பாழடையும் பொதுக்கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கே.வி.குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் ஊராட்சியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் வசதிக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 2012- 2013ம் ஆண்டு சார்பில் அப்போதைய ஒன்றிய குழுத் தலைவர் லோகநாதன் நிதியில் சுமார் ₹4.40 லட்சம் மதிப்பீட்டில் அதே பகுதியில்  இலவச பொதுக்கழிப்பிடம் கட்டி கொடுக்கப்பட்டது. இந்த கழிப்பிடத்தால், அந்தப்பகுதி பெண்கள், சிறுமிகளுக்கு மிகவும் பயனடைந்து வந்தனர்.

இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக மேலாக அங்கு தண்ணீர் இல்லாததால், பராமரிப்பின்றி புதர் மண்டி கழிப்பிடத்தை சுற்றி செடி, கொடி,  மரங்கள் சூழ்ந்துள்ளன. மேலும், வடுகன்தாங்கல் பஸ் நிலையம் அருகே கழிப்பிடம் இருப்பதால் கீழ்முட்டுக்கூர், சென்றாம்பள்ளி, சின்னவடுன்தாங்கல், கீழ்விலாச்சூர், கொத்தமங்கலம், வடவிரிஞ்சிபுரம், முடினாம்பட்டு, விரிஞ்சிபுரம், செதுவாலை, ஆகிய பகுதிகளுக்கு செல்லும்  பயணிகள் வடுகன்தாங்கல் பஸ் நிலையத்திற்கு வந்து செல்வர்.

மேலும் வாரம் ஒருமுறை அங்கு சந்தை போடுவதாலும், விஏஓ அலுவலகம், ஊராட்சி சேவை மையம், ஊராட்சி அலுவலகம், நூலகம், தோட்டக்கலை துறை அலுவலகம் இருப்பதாலும் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடமாக இந்த இடம் இருப்பதால், அங்கு வரும் பெண்களும், மூதாட்டிகளும் இயற்கை உபாதை கழிப்பதற்கு திறந்த வெளியை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு மிகுந்த சிரமித்துக்குள்ளாகின்றனர்.

மேலும்  இரவு நேரத்தில் அந்த கழிப்பிடம் சமூக விரோதிகளின் மது அருந்தும் கூடாரமாக மாறியுள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகமானது, அந்த பொதுக்கழிப்பிடத்தில் புதியதாக கழிப்பறைகள், கதவுகள் அமைத்தும், தண்ணீர் வசதி ஏற்படுத்தியும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: