கே.வி.குப்பம் அருகே பரபரப்பு ஊர் பெயர் பலகை வைத்த பிரச்னையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்-2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

கே.வி.குப்பம் : கே.வி.குப்பம் அருகே ஊர் பெயர் பலகை வைத்ததில் ஏற்பட்ட பிரச்னையில் இருதரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கே.வி.குப்பம் ஒன்றியத்துக்குட்பட்ட வேலம்பட்டு ஊராட்சி, சோழமூர் ஊராட்சி  ஆகிய இரு ஊராட்சிகள் உள்ளது. சோழமூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வரும் ரயில்வே கேட் அருகே உள்ள ஒரு பகுதிக்கு ரங்கம்பேட்டை கேட் என்ற பெயர்  கடந்த 40 வருடங்களாக  பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் வேலம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மேவிதா தீர்த்தகிரி வேலம்பட்டு ஊராட்சியின்  பெயர் பலகையை ரங்கம்பேட்டை கேட் பகுதியில் நேற்று முன்தினம்   வைத்தார்.

இதனை கண்டித்து சோழமூர் ஊராட்சிக்குட்பட்ட மக்கள் காட்பாடி- குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பெயர் பலகையை அகற்ற கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சோழமூர் ஊராட்சியை சேர்ந்தவர்கள் ரங்கம்பேட்டை கேட் என்ற பெயர் பலகையை வைக்க வேண்டும். புதிதாக வைக்கப்பட்ட வேலம்பட்டு ஊராட்சி பெயர் பலகையை அகற்ற வேண்டும்  என்று கோஷமிட்டனர். அதேபோல் வேலம்பட்டு ஊராட்சியை சேர்ந்தவர்கள் புதிதாக வைக்கப்பட்ட வேலம்பட்டு ஊராட்சி பலகையை பயன்பாட்டில் வைக்க வேண்டும் என்று கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தகவலறிந்த லத்தேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வகுமார், ரங்கநாதன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன், பனமடங்கி சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், ராஜாராம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட போலீசார், விஏஓக்கள் பாலாசந்தர், ராஜாசேகரன், ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் மேவிதா தீர்த்தகிரி, ஊராட்சி செயலாளர் ராமு ஆகியோர் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து புதிதாக வைக்கப்பட்ட பெயர் பலகை அகற்றப்பட்டது. இதையடுத்து, இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து  சென்றனர். இந்த சாலை மறியல் சம்பவத்தால், 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.நெடுஞ்சாலை துறையினர் பெயர் பலகையை வைக்காததே மேற்கண்ட பிரச்னைக்கு  முக்கிய காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் பெயர் பலகையை வைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: