சங்கரன்கோவிலில் பராமரிப்பின்றி பாழான ஆவுடைப்பொய்கை தெப்பம்

சங்கரன்கோவில் : சங்கரன்கோவிலில் பராமரிப்பின்றி பாழான ஆவுடைப்பொய்கை தெப்பத்தை விரைவில் தூர்வாரி சீரமைக்குமாறு ராஜா எம்எல்ஏ வலியுறுத்தி உள்ளார்.

தென்தமிழகத்தில் பிரசித்திப்பெற்ற சங்கரன்கோவில்  சங்கர நாராயண சுவாமி கோயிலில் தை மாத கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் தெப்ப உற்சவம் தனித்துவமிக்கது. இக்கோயிலுக்கான ஆவுடைப்பொய்கை தெப்பமானது, சங்கரன்கோவில் அரசு மகளிர் பள்ளி அருகே  அமைந்துள்ள போதும் முறையான பராமரிப்பின்றி பாழடைந்து காட்சியளிக்கிறது. மேலும் தண்ணீர் வசதியின்றி கடந்த 2016 முதல் 2020ம் ஆண்டு வரை தெப்ப உற்சவம் தடைபட்டது. கடந்தாண்டு பக்தர்களின் தொடர் வலியுறுத்தலின் பேரில் பிப்.12ல் தெப்ப உற்சவம் நடந்தது.

தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவரும், உற்சவத்தின்போது தெப்பத்தேரை இழுக்க பயன்படுத்தும்  உள்புற சுற்றுச்சுவரும் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காட்சியளிக்கிறது. மேலும் கடந்த பருவமழை கொட்டித் தீர்த்ததால் தெப்பத்தில் தண்ணீர் முழுமையாக உள்ளபோதும் முழுவதும் பாசி படிந்து காணப்படுகிறது. எனவே இந்தாண்டு தெப்ப உற்சவம் நடத்த ஏதுவாக தற்போதே ஆவுடைப்பொய்கை தெப்பத்தை முறையாகத் தூர்வாரி சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அய்யப்ப சேவா சங்கத்தினர், செந்திலாண்டவன் திருச்சபையினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் அறநிலையத்துறை அதிகாரி, திருக்கோயில் அதிகாரி, நகராட்சி அதிகாரியிடம் மனு  அளித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனுவில், ‘‘கடந்தாண்டை போல் இந்தாண்டுக்கான தெப்ப உற்சவத்தை முன்னிட்டு அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினர் உள்ளிட்ட சங்கரன்கோவிலில்  உள்ள அனைத்து இந்து அமைப்பினரும் வரும் பிப்.6ம் தேதி தெப்பத்தை உழவாரப் பணி மேற்கொண்டு தூர்வாரி சீரமைக்க முடிவு செய்துள்ளோம். எனவே, நகராட்சி நிர்வாகம் சார்பில்  தூய்மைப் பணியாளர்கள், சீரமைப்புக்கு தேவைப்படும் பொருட்கள், டிராக்டர்,  ஜேசிபி, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்துதருவதோடு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென குறிப்பிட்டு உள்ளனர்.  மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் அய்யப்ப சேவா சங்க தலைவர்  சுப்பிரமணியன், துணை தலைவர்கள் சுந்தரராஜன்,  தண்டபாணி, செயலாளர் கதிர்வேல் ஆறுமுகம், பொருளாளர்  சங்கரவேலு உள்பட  நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

இதனிடையே தகவலறிந்த ராஜா எம்எல்ஏவும், இந்தாண்டு தை கடைசி வெள்ளியன்று தெப்ப உற்சவத்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். தெப்பத்தை முறையாக தூர்வாரி சீரமைக்கவும் ஆவன செய்ய அதிகாரிகளை வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கை

சங்கரன்கோவில்  ஆவுடைபொய்கை தெப்பம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடப்பதால் அதன் சுற்றுச்சுவரும், தேர் இழுப்பவர்கள் பயன்படுத்தும் உள் சுற்றுச்சுவரும் மிகுந்த  சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்நிலையில் உற்சவம் நடக்கும் நிலையில்  பாதுகாப்பு ஏற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும் என்பதே முக்கியம்.  சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தால் தேரோட்டத்தை காண வரும் பக்தர்கள் உள்ளே  விழாத வண்ணமும், உள்பக்கம்  தேர் இழுப்பவர்கள் தெப்பத்தில் விழுந்துவிடாமல்  வண்ணமும் பாதுகாப்பை துரிதப்படுத்த வேண்டும்.

சுற்றுச்சுவர் சேதமடைந்த  நிலையில் உள்ளதால் பக்தர்களை சேதமடைந்த பகுதிக்கு அனுப்பி விடாமல்  போலீசார்  தடுக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  ஆம்புலன்ஸ் வாகனமும்,  தீயணைப்பு வாகனமும் நிறுத்த வேண்டும் என்பதே  சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Related Stories: