ஆன்லைன் மூலம் நெல் விற்பனை முறையை கைவிட வலியுறுத்தி தஞ்சையில் விவசாயிகள் போராட்டம்

தஞ்சை: ஒன்றிய அரசின் ஆன்லைன் முன்பதிவு கொள்முதல் முறைக்கு எதிராக நூதன முறையில் சங்கொலி எழுப்பி காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். நெற்பயிர்களை கொள்முதல் செய்வதில் ஆன்லைன் முறையை ஒன்றிய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆனால் இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக குற்றம் சாட்டினர். தஞ்சாவூரை அடுத்த அம்மாப்பேட்டையில் திரண்ட விவசாயிகள் சங்கொலி எழுப்பியும் மணி அடித்தும் நூதன முறையில் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

சர்வர் பழுது, இணைய சேவை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஒரு மூட்டை நெல்லை விற்பனை செய்ய ஒரு மாதத்திற்கு மேலாக காத்து கிடப்பதாக விவசாயிகள் கூறினர். எனவே ஆன்லைன் முறையில் நெல் விற்பனை செய்யும் முறையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நெல்லை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் கால தாமதம் செய்வதை கண்டித்து வத்திராயிருப்பு - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் நெல் மூட்டைகளை சாலையில் போட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சர்வர் பழுதால் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளுடன் பல நாட்கள் காத்திருக்கவேண்டிய சூழல் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

ஆன்லைன் சேவையில் உள்ள குளறுபடிகள், இணைய சேவையில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்து விரைந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக்கொண்டனர். கஷ்டப்பட்டு சாகுபடி செய்த நெல்மணிகள் வீணாகி போவதாகவும் மழை, பனி உள்ளிட்ட இயற்கையில் நனைந்து முளைக்கும் நிலை உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: