அவிநாசி அருகே சோளக்காட்டில் புகுந்த சிறுத்தை: 2வது நாளாக தேடுதல் வேட்டையில் வனத்துறை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பாப்பாங்குளம் பகுதியில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர் உட்பட 5 பேரை தாக்கிவிட்டு புதரில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை பிடிக்கும் பணி இரண்டாவது நாளாக தொடர்கிறது. இந்த பகுதியில் உள்ள புதருக்குள் சிறுத்தை பதுங்கியுள்ளது. இரண்டு நாட்களாக பதுங்கியுள்ள இந்த சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். வன உயிரியல் ஆர்வலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதி தற்போது போலீசார் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. 30 - 35 கி.மீ தொலைவில் உள்ள அடர் வனப்பகுதியில் இருந்து இங்கு வந்ததாக கூறப்படுகிறது.

சிறுத்தை பதுங்கியுள்ள இடத்தை கண்டறிய 15க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமராவில் பதிவாகும் காட்சிகளை வைத்து சிறுத்தை தற்போதைய உடல்நிலை குறித்து ஆராயப்படுகிறது. வன கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். குழந்தைகளும் வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சோளக்காட்டை சுற்றிலும் 3 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கூண்டுகளில் மாமிசம் வைக்கப்பட்டுள்ளது. மாமிசத்தை சாப்பிட வரும் போது சிறுத்தை பிடிபட வாய்ப்புள்ளது. சூழ்நிலையை பொறுத்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் தயார் நிலையில் உள்ளனர். NET GUN தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: