×

ஏழை - பணக்காரர் இடைவெளியை விரிவுபடுத்திய பெருமை மோடி அரசையே சேரும்!: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம்..!!

டெல்லி: நாட்டில் ஏழை, பணக்காரர் இடையிலான இடைவெளியை அதிகப்படுத்திய பெருமை ஒன்றிய பாஜக அரசையே சேரும் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ஒன்றிய பாஜக அரசு திறம்பட செயல்படவில்லை என ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ள அவர், கொரோனா தொற்றால் ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்பட்டிருக்கும் அதே நேரம், மோடி அரசின் பொருளாதார பெருந்தொற்றால் ஏழைகளும், நடுத்தர மக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார். ஏழை - பணக்காரர் இடைவெளியை விரிவுபடுத்திய பெருமை பாஜக அரசையே சேரும் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு 4 கோடி போ் வறுமை நிலைக்கு சென்றுவிட்டதாகவும், அதே சமயம் நாட்டில் உள்ள இரு பெரும் கோடீஸ்வரா்களின் சொத்து மதிப்பு அதீத வளா்ச்சியை அடைந்துள்ளதாகவும் கடந்த சில நாட்களுக்குமுன் வெளியான ஆக்ஸ்ஃபாம் அறிக்கை கூறியது. இந்த அறிக்கையை பகிர்ந்து ஒன்றிய அரசை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அதில், கடந்த ஐந்து ஆண்டுகளில், ஏழை 20 சதவீத இந்திய குடும்பங்களின் ஆண்டு குடும்ப வருமானம் சுமார் 53 சதவீதம் குறைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல், 20 சதவீதத்திற்கு கீழ் நடுத்தர மக்களின் குடும்ப வருமானமும் 32 சதவீதம் குறைந்துள்ளது. இந்தச் அறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில், நாட்டில் உள்ள 20 சதவீத பணக்காரர்களின் வருமானம், 39 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


Tags : Modi ,Ragul Gandhi , Poor - rich gap, Modi, Rahul Gandhi
× RELATED கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு...