தமிழுக்காக உயிர்த் தியாகம்!: மொழிப்போர் தியாகிகள் மண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை..!!

சென்னை:  மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டி மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தியாகிகளின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, சிவகங்கை ராஜேந்திரன், மயிலாடுதுறை சாரங்கபாணி என பலர், இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காக்கவும் தங்களது உயிரை நீத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதற்காக பல அரசியல் கட்சி தலைவர்களும் மொழிப்போர் தியாகிகளின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். இன்றைய தினம் திராவிடர் கட்சிகள் சார்பில் மொழிப்போர் வீரவணக்க நாள் கூட்டங்கள் நடைபெறும்.

அரசு சார்பிலும் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், மொழிப்போர் தியாகிகள் மண்டபத்தில் உள்ள தியாகிகளின் திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.என்.நேரு, ஏ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சுவாமிநாதன், திட்டக்குடி கணேசன், திமுக மாநில மாணவர் அணி செயலாளரும் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ.வுமான எழிலரசன் உள்ளிட்டோர் பங்கேற்று தியாகிகளுக்கு மரியாதை செய்தனர். முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

Related Stories: