ஹைதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்... நில அதிர்வுகள் தொடர்வதால் பதற்றம் நீடிப்பு; 50 பேர் படுகாயங்களுடன் மீட்பு!!

ஹைதி :கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள ஹைதி நாட்டில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் படுகாயம் அடைந்தனர். உள்ளூர் நேரப்படி காலை 8.15 மணிக்கு ஹைதி தலைநகர் போர்ட் அவ் பிரின்ஸில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் நாட்டின் தெற்கு நகரங்கள் முழுவதிலும் உணரப்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 5.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. Nippes மாவட்டத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக அந்நாட்டு நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர் அதிர்வுகளால் பல்வேறு நகரங்களில் பழமையான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.ஹன்சியா, வியாப் கடற்கரை நகரத்தில் இடிபாடுகளில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிலநடுக்கத்தால் Fonds-des-Negres பகுதியில் நிலச்சரிவில் சிக்கி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இடிபாடுகளில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிலம் லேசாக அதிர தொடங்கியதும் கட்டிடங்களை விட்டு மக்கள் வெளியேறி விட்டதால் பெருமளவிலான உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கும் பேரிடர் மேலாண் படையினர், மோப்ப நாய்களின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். நிலநடுக்கத்திற்கு பிறகும் ஹைதியில் மிதமான நில அதிர்வுகள் தொடர்ந்து வருவதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. 

Related Stories: