×

வேதாரண்யம் மீனவர்கள் 3 பேரை கடலில் தள்ளிவிட்ட கொடூரம்: இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்

வேதாரண்யம்: வேதாரண்யத்தை சேர்ந்த 11 மீனவர்களை தாக்கி அவர்களிடமிருந்து வலை, ஜிபிஎஸ் கருவிகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதில் 3 பேரை கடலில் தள்ளி விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனத்தை சேர்ந்த நாகமணி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரை சேர்ந்த நாகமுத்து (44), பன்னீர்செல்வம்(45), ராஜேந்திரன்(54) ஆகிய 3பேரும் நேற்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு படகில் வந்த 3 இலங்கை கடற்கொள்ளையர்கள், புஷ்பவனம் மீனவர்களின் படகில் ஏறி அவர்களை கம்பு, இரும்பு கம்பிகளால் தாக்கியதோடு 3 பேரையும் கடலில் தள்ளி விட்டனர். பின்னர் படகில் இருந்த 200கிலோ எடையுள்ள வலை, ஜிபிஎஸ் கருவி, வாக்கிடாக்கி செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். அப்போது அவர்கள் படகில் இருந்து டீசலையும் எடுத்து சென்றனர்.

இதனால் கரைக்கு வர முடியாமல் தத்தளித்த மீனவர்கள் அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களிடம் 2 லிட்டர் டீசலை வாங்கி நிரப்பி கொண்டு ஆறுகாட்டுத்துறைக்கு வந்து சேர்ந்தனர். பின்னர் அங்கிருந்த சக மீனவர்கள் உதவியுடன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

இதேபோல் புஷ்பவனம் மீனவ கிராமத்தை சேர்ந்த வாசுகி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று அதிகாலை அதே ஊரை சேர்ந்த மீனவர்கள் 8 பேர் புஷ்பவனத்திற்கு தென்கிழக்கே 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 3 படகில் வந்த 9 இலங்கை கடற்கொள்ளையர்கள், புஷ்பவனம் மீனவர்களின் படகில் ஏறி இரும்பு கம்பி, வால் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி மிரட்டியதோடு படகில் இருந்த இன்வேட்டர் பேட்டரி, ஜி.பி.எஸ் கருவி, டார்ச் லைட், 20லிட்டர் டீசல், ஐஸ்பாக்ஸ், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள், டூல்ஸ் பாக்ஸ், சிக்னல் லைட் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல்படை போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Vedaranyam fishermen dumped at sea: Sri Lankan pirates
× RELATED போலி பாஸ்போர்ட் வழக்கில் இலங்கை மாஜி அமைச்சரின் மனைவிக்கு 2 ஆண்டு சிறை