போலீஸ்காரருக்கு ‘பளார்’; குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தவர் ரகளை: கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்தவர் வேதகிரி (39). காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடக்கும் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க நேற்று வந்தார். அங்கு, கொரோனா கட்டுப்பாடுகளால் மனுக்களை கூட்ட அரங்கில் உள்ள பெட்டியில் போடும் நடைமுறை உள்ளது. இதனை ஏற்க மறுத்த வேதகிரி, கலெக்டர் நேரடியாக வந்து தனது மனுவை பெற வேண்டும். எனக்கு பென்ஷனுடன் கூடிய வேலை வழங்க வேண்டும் என ரகளை செய்தார். இதை பார்த்ததும், அங்கு பணியில் இருந்த தாசில்தார் ஜெயசித்ரா தடுக்க முயற்சித்தார். ஆனால் அவர் கூச்சலிட்டு, தகராறு செய்தார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் அங்கு வந்த காவலர் நீலகண்டன், வேதகிரியிடம் சமரசம் பேசி அழைத்தார். அதனை ஏற்காத வேதகிரி, காவலர் நீலகண்டனை கன்னத்தில் பளார் என அறைந்தார். இதனால் நிலைகுலைந்த காவலர், மேலும் 2 காவலர்களை அழைத்து அவரை குண்டு கட்டாக தூக்கி ஆட்டோவில் ஏற்றி கொண்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு, கலெக்டர் அலுவலக குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் ரகளையில் ஈடுபட்டு போலீசை அறைந்த வேதகிரியிடம் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Related Stories: