கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கோழிக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில் இருவார கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை. செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம பொருளாதார முக்கிய பங்கு வகிக்கும் நாட்டு கோழிகள் மற்றும் பிறவகை கோழிகளுக்கு கோடை காலங்களில் ஏற்படும் வெள்ளைக் கழிச்சல் நோய் பெரும் பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

இதனால், இந்த நோயை கட்டுப்படுத்த,  ஒவ்வொரு சனிக்கிழமையும், அரசு கால்நடை மருந்தகங்களிலும், 15 நாட்களுக்கு ஒருமுறை அரசு மருத்துவ கிளை நிலையத்திலும், கால்நடை பாதுகாப்பு திட்ட முகாமிலும், கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி போடப்படுகிறது. இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில்,  கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம், கிராமம்தோறும் நடத்தப்படுகிறது.

இந்தாண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் பிப்ரவரி 1 முதல் 14ம் தேதி வரை 3 லட்சம் கோழிகளுக்கு இருவார கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. எனவே, மாவட்டத்தில் கோழிகளை வளர்க்கும் அனைவரும், அந்த முகாமில்  கலந்து கொண்டு, தங்களது கோழிகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டு, வெள்ளை கழிச்சலால் ஏற்படும் இறப்பை தவிர்க்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: