கடந்த 5 ஆண்டுகளில் பணக்காரர்கள் சம்பாத்தியம் 39% அதிகரிப்பு: ஏழைகள் வருமானம் 53 சதவீதம் சரிந்தது

புதுடெல்லி: மத்தியில் ஆளும் பாஜ அரசு பணக்காரர்கள், தொழிலதிபர்கள் நலனை கருத்தில் கொண்டே திட்டங்கள் வகுப்பதாகவும், இந்த ஆட்சியில் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றன. இதை நிரூபிக்கும் வகையில், பொருளாதார ஆய்வு முடிவு ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையை சேர்ந்த இந்தியாவின் நுகர்வோர் பொருளாதாரம் குறித்த மக்கள் ஆய்வு (பிரைஸ்) என்ற அமைப்பு, கடந்த ஆண்டு ஏப்ரல் - அக்டோபர் மாதங்களில் ஆய்வு நடத்தியது.

இதில் 2.42 லட்சம் குடும்பங்களிடம் இருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன. நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் உள்ள 120 நகரங்கள் மற்றும் 800 கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 100 சதவீத மக்கள் ஏழைகள், கீழ்மட்ட நடுத்தர வர்க்கம், நடுத்தர வர்க்கம், உயர்மட்ட நடுத்தர வர்க்கம், பணக்காரர்கள் என (தலா 20 சதவீதம்) என 5 பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆய்வு முடிவில், கடந்த 5 ஆண்டில் நாட்டில் உள்ள ஏழை மக்கள் தங்கள் வருமானத்தில் பாதியை இழந்துள்ளதாக கூறி உள்ளது.

அதாவது, 20 சதவீத ஏழை இந்தியக் குடும்பங்களின் ஆண்டு வருமானம் 2015-16ல் இருந்ததை விட அடுத்த 5 ஆண்டில் 2020-21ம் ஆண்டில் கொரோனா பாதிப்பின் காரணமாக 52.6 சதவீதம் குறைந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இதே காலகட்டத்தில் 20 சதவீத பணக்காரர்களின் ஆண்டு வருமானம் 39 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் கீழ்மட்ட நடுத்தர வர்க்கம், நடுத்தர வர்க்கத்தினர் ஆண்டு வருமானம் முறையே 32.4 சதவீதம், 8.9 சதவீதம் சரிந்துள்ளது. அதாவது நாட்டின் 60 சதவீத மக்கள் 5 ஆண்டுக்கு முன்பு ஈட்டிய வருமானத்தை விட தற்போது குறைவான வருமானம் ஈட்டுவதாகவும் அதே சமயம் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிக் கொண்டிருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: