தொகுதி பங்கீடு முடிவானது பஞ்சாப்பில் பாஜ 65 தொகுதியில் போட்டி

புதுடெல்லி: பஞ்சாப்பில் பாஜ கூட்டணி தொகுதி பங்கீடு முடிவாகி உள்ளது. இதில் பாஜ 65 தொகுதியில் போட்டியிடுகிறது. கூட்டணியில் உள்ள அமரீந்தர் கட்சிக்கு 37 சீட்களும், சிரோமணி அகாலி தளம் (சன்யுக்த்) கட்சிக்கு 15 சீட்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. உபி, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதில் 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் ஒரே கட்டமாக தேர்தல் அடுத்த மாதம் 20ம் தேதி நடக்க உள்ளது. இதில் ஆளும் காங்கிரசை எதிர்த்து ஆம் ஆத்மி, பாஜ கூட்டணி போட்டியிடுகிறது. காங்கிரசில் இருந்து சமீபத்தில் விலகிய அக்கட்சியின் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். அவர் பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளார். பாஜ கூட்டணியில் அமரீந்தர் கட்சி தவிர சிரோமணி அகாலி தளம் (சன்யுக்த்) கட்சியும் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், பாஜ கூட்டணி தொகுதி பங்கீடு நேற்று உறுதியானது. அதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள பாஜ கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொகுதி பங்கீட்டை வெளியிட்டார். அதன்படி, பஞ்சாப்பில் பாஜ 65 இடங்களில் போட்டியிடுகிறது. அமரீந்தர் கட்சிக்கு 37 இடங்களும், சிரோமணி அகாலி தளத்திற்கு 15 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக நட்டா அறிவித்தார்.

அப்போது பேசிய அவர், ‘‘நாட்டின் உணவு பாதுகாப்பு மற்றும் ராணுவத்திற்கு தலைமை தாங்கும் பஞ்சாப் மீது சிறப்பு கவனம் தேவைப்படுகிறது.  இங்கு, ஒன்றிய மாநில அரசுகள் இடையே நல்ல ஒத்துழைப்பு நிலவ இரட்டை இன்ஜின் அரசு அமைவது அவசியமாகும். எனவே நாட்டின் பாதுகாப்பிற்காகவும், மாநிலத்தின் நலனுக்காக பாஜ, பஞ்சாப் லோக் காங்கிரஸ், சிரோமணி கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளன’’ என்றார்.

வேளாண் சட்டங்களை கொண்டு வந்ததால் மத்தியில் ஆளும் பாஜ மீது பஞ்சாப் விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பஞ்சாப்பில் பாஜ கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கர்கால் தொகுதியில் அகிலேஷ் போட்டி: உபி.யில் சமாஜ்வாடி கட்சி 159 பேர் கொண்ட முதல் வேட்பாளர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில், மெயின்புரி மாவட்டத்தில் உள்ள கர்கால் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார். அவரது சித்தப்பா சிவ்பால் யாதவ், இடவா மாவட்டத்தின் ஜஸ்வந்த்நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் அசம்கான் ராம்பூர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சமாஜ்வாடியில் மீண்டும் இணைந்த முன்னாள் அமைச்சர் தரம் சிங் சாய்னி ஷகரன்பூர் மாவட்டத்தில் உள்ள நாக்கூர் தொகுதிகளில் போட்டியிட உள்ளனர்.

இதுக்காகத்தான் அயோத்தியில் போட்டியிடலையா?: அயோத்தி தொகுதியில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் இம்முறை போட்டியிடுவார் என பேசப்பட்டது. ஆனால், அவர் தனது சொந்த ஊரான கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவித்தார். இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் அளித்த பேட்டியில், ‘‘ ராமர் கோயில் கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்துதலில், ஏராளமான வீடு, கடைகள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் இங்கு அவருக்கு நிறைய எதிர்ப்பு இருக்கிறது’’ என்றார்.

சமாஜ்வாடி, பாஜ கட்சி எம்எல்ஏக்கள் தாவல்: உபியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து விலகுவது தினசரி வாடிக்கையாகி உள்ளது. அந்த வகையில் நேற்று சமாஜ்வாடியின் ஜலால்பூர் தொகுதி எம்எல்ஏ சுபாஷ் ராய் அக்கட்சியிலிருந்து விலகி துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா முன்னிலையில் பாஜவில் இணைந்தார். இதே போல, ஆக்ரா மாவட்டத்தின் பதேஹாபாத் தொகுதி பாஜ எம்எல்ஏ ஜிதேந்திர வர்மா நேற்று அக்கட்சியிலிருந்து விலகி சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார். உபியில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இதுவரை பாஜ கட்சியில் இருந்து 3 அமைச்சர்கள், 8 எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: