குடியரசு தினத்தை முன்னிட்டு காஷ்மீரில் முழு சீருடை அணிவகுப்பு ஒத்திகை

ஸ்ரீநகர்: குடியரசு தினத்தை முன்னிட்டு காஷ்மீரில் முழு சீருடை அணிவகுப்பு ஒத்திகை  நேற்று நடந்தது. நாடு முழுவதும் குடியரசு தினவிழா கோலாகலமாக நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் முழு சீருடை அணிவகுப்பு நேற்று நடந்தது.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஸ்ரீநகரின் ஷெரீ- இ- காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் ஒத்திகை நடந்தது. பலத்த பாதுகாப்புடன் நடந்த இந்த ஒத்திகையில் போலீஸ் மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து காஷ்மீர் ஐஜி விஜயகுமார் கூறுகையில், ‘‘குடியரசு தின விழா எந்த ஒரு அசம்பாவிதங்கள் இன்றி அமைதியாக நடைபெறுவதற்கு காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சமூக விரோத சக்திகளின் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் வாகன சோதனைகளை நடத்தி வருகின்றனர். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மற்றும் ஸ்ரீநகரின் பதட்டமான பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.

135 பேர் ஊடுருவ காத்திருப்பு: காஷ்மீர் பிஎஸ்எப் ஐஜி ராஜாபாபு சிங் கூறுகையில்,‘‘பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர் எல்லை வழியாக ஊடுருவுவதற்கு 135 தீவிரவாதிகள் காத்திருக்கின்றனர் என்ற ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ராணுவம் மற்றும் பிஎஸ்எப் படையினருக்கு இடையே  ஒத்துழைப்பு சுமூகமாக உள்ளது. யாராவது இந்திய எல்லையை கடந்து உள்ளே புகுந்து, தாக்குதல் நடத்தினால் அவர்கள் சுட்டு கொல்லப்படுவார்கள்’’ என்றார்.

எல்லை கண்காணிப்பு: இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய  எல்லை பாதுகாப்பு படை ஐஜி டி.கே.பூரா,‘‘ குடியரசுதினத்தன்று தேசத்துக்கு எதிரான சக்திகள் குழப்பத்தை உருவாக்க முயற்சி செய்யும் என தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, இந்தியா- பாக். எல்லையை  தீவிரமாக கண்காணித்து வருகிறோம்’’ என்றார்.

Related Stories: