கவுன்சிலர் சாவில் திடீர் திருப்பம்; சாப்பாட்டில் விஷம் கலந்து கணவரை கொன்றது ஏன்?: மனைவி போலீசில் திடுக் தகவல்

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வேட்டைக்காரனிருப்பு, சடையன்காடு பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன்(47). கீழையூர் ஒன்றிய திமுக கவுன்சிலர். இவரது மனைவி சூர்யா (26). இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தேவேந்திரன் கடந்த மாதம் 15ம் தேதி வீடு திரும்பினார்.

இந்நிலையில் கடந்த 4ம் தேதி அவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கடந்த 6ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதையடுத்து தேவேந்திரனின் உடல் அன்றே அவரது ஊருக்கு கொண்டு வரப்பட்டு அவசர அவசரமாக தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் தேவேந்திரனின் இறப்புக்கு பிறகு அவரது மனைவி சூர்யா, கணவன் இறந்த துக்கம் தெரியாமல் ஹாயாக தினமும் தனிமையில் செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த தேவேந்திரனின் உறவினர் சதீஷ்கண்ணா என்பவர் சூர்யாவின் செல்போனை பறித்து ஆய்வு செய்த போது தேவேந்திரன் மனைவி சூர்யாவுக்கும், தேவேந்திரன் வீட்டில் கடந்த 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த அதே பகுதியை சேர்ந்த இன்ஜினீயர் சந்திரசேகரன்(32) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சதீஷ்கண்ணா கொடுத்த புகாரின் பேரில் வேட்டைக்காரனிருப்பு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த சம்பவத்தில் சூர்யா அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சூர்யா வீட்டின் ஏழ்மையை பயன்படுத்தி தேவேந்திரனின் வீட்டார் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் ஆனதில் இருந்து சூர்யா நிம்மதி இல்லாத வாழ்க்கை வாழ்ந்துள்ளார். வீட்டில் வேலைக்கு சேர்ந்த சந்திரசேகரனுக்கும் சூர்யாவுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. இது ஒரு கட்டத்தில் தேவேந்திரனுக்கு தெரியவரவே அவர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் தேவேந்திரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். உடனே கொலை செய்து விட்டால் வெளியே தெரிந்துவிடும் என்பதால், தேவேந்திரன் சாப்பிடும்போது, சாம்பாரில் அவ்வப்போது விஷத்தை கலந்து கொடுத்து உடலில் சிறிது சிறிதாக பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்படும் வகையில் விஷம் கொடுத்துள்ளனர்.

இதனால் தேவேந்திரனுக்கு மஞ்சள் காமாலை, கல்லீரல் பிரச்னை ஏற்பட்டு திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தேவேந்திரன் உயிரிழந்தும், உடலை அவசர அவசரமாக தகனம் செய்ததும் தெரியவந்தது என தெரிவித்தனர்.  இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். இதில் கைதான சூர்யா திருச்சி மகளிர் சிறையிலும், சந்திரசேகரன் சீர்காழி சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Related Stories: