×

நெல்லையில் வாகன சோதனையில் பெங்களூரு தொழிலதிபர் காரில் ரூ.1 கோடி சிக்கியது: இருவரிடம் போலீசார் விசாரணை

நெல்லை:  பாளையங்கோட்டை கேடிசி நகர் நான்கு வழிச்சாலையிலுள்ள போலீஸ் சோதனை சாவடியில் நேற்று  போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நெல்லை டவுனில் இருந்து வந்த கார் ஒன்றில் சோதனை நடத்திய போது அதிலிருந்து ஒரு லெதர் பேக்கில் ₹1 கோடி பணம் கட்டுக் கட்டாக இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், காரில் வந்தவர்களிடம் பணம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் தனிப்படையினர் அவர்களை நெல்லை மாநகர ஆயுதப்படைக்கு கொண்டு சென்று விசாரணை நடத்திய போது, நெல்லை டவுனைச் சேர்ந்த முகம்மது அசாருதீன் (36) மற்றும் பாளை. பெருமாள்புரம் திருமால்நகரைச் சேர்ந்த நில புரோக்கரான முத்துபாண்டி (44) என தெரிய வந்தது.

மேலும் நெல்லை டவுனில் முகம்மது அசாருதீன் நடத்தி வந்த நகைக்கடையில் தொழில் முடக்கம் ஏற்பட்டதால்,  இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் குடும்பத்தினருடன்  குடியேறினார். அங்கு சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். மேலும்  பழைய தங்க நகைகளை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார். இதில்  கிடைத்த லாபத்தை கொண்டு பாளை கேடிசி நகர் நான்கு வழிச்சாலையிலுள்ள நிலத்தை  வாங்குவதற்கு திட்டமிட்டார். அதற்காக கொண்டு வந்த பணம் என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ.1 கோடி மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து போலீஸ் துணை  கமிஷனர் கே.சுரேஷ்குமாரிடம் ₹1 கோடிக்கான ஆவணங்கள்  மற்றும் விலைக்கு வாங்கவுள்ள நிலத்திற்கான ஆவணங்கள் ஆகியவற்றை முகம்மது  அசாருதீன் அளித்தார். அந்த ஆவணங்களை சரிபார்த்த போலீசார், பின்னர் ரூ.ஒரு  கோடி மற்றும் காரை நெல்லை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags : Bangalore ,Nellai , Bangalore businessman's car found Rs 1 crore in Nellai
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...