வடமாநில வியாபாரிகள் 150 பேரிடம் ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: சேலம் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சேலம்:சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் மளிகை கடை, பிளாஸ்டிக் வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகின்றனர். இங்குள்ள வெங்கடகிருஷ்ணன் தெருவை சேர்ந்த பிரகாஷ், கடந்த 10 ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். பிரகாஷின் சொந்த மாநிலமும் ராஜஸ்தான் என்பதால், 150க்கும் மேற்பட்டோர் அவரிடம் சீட்டு போட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக சீட்டு முடிந்தவர்களுக்கான பணத்தை பிரகாஷ் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சீட்டு போட்டவர்களுக்கு பிரகாஷ் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘‘நான் உங்களிடம் கடன் வாங்கி இருந்தேன். அதனை நான் திருப்பி செலுத்தி விட்டேன். நீங்கள் கந்துவட்டி கேட்டு மிரட்டுகிறீர்கள். உங்கள் மீது காவல்துறையில் புகார் அளிப்பேன்’’’’ என்று தெரிவித்திருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் அவரிடம் நேரடியாக சென்று கேட்டனர். ஆனால் அவர், அவர்களை மிரட்டியதாக தெரிகிறது.

இதையடுத்து வழக்கறிஞர் அய்யர்மணி தலைமையில் 60க்கும் மேற்பட்டோர் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் புகார் மனு ஒன்றை அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘150க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பிரகாஷிடம் சீட்டு போட்டோம். ஆனால் அவர் பணத்தை கொடுக்கவில்லை. ₹15 கோடிக்கும் மேல் மோசடியில் ஈடுபட்டுள்ளார். அந்த பணத்தை கொண்டு சேலம், அந்தியூர், ஈரோடு ஆகிய இடங்களில் சொத்துகளை வாங்கி வைத்துள்ளார்.

ஏலச்சீட்டு நடத்திவிட்டு எங்களிடம் கடன் வாங்கியதாக பொய்யான தகவல் கூறுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும்,’’ என்றனர். இது ஏலச்சீட்டு புகார் என்பதால் போலீசார், பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர். அங்கும் அவர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

Related Stories: