தஞ்சை மாணவியின் வாக்குமூலத்தை செல்போனில் பதிவு செய்தவர் போலீசில் ஆஜராக வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தஞ்சை மைக்கேல்பட்டி தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ் 2 மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்தார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மாணவியின் தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி மாணவியின் தந்தை முருகானந்தம், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி, ‘‘இந்த வழக்கை சிறப்பு டிஎஸ்பி விசாரிக்கிறார். பெற்றோரின் வாக்குமூலம் உள்ளிட்ட அனைத்துவிதமான கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. பள்ளி மற்றும் மருத்துவமனை பணியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 37 சாட்சிகள் இதுவரை சேர்க்கப்பட்டு, 14 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனை இறுதி அறிக்கை மற்றும் தடயவியல் அறிக்கைகள் பெற வேண்டியுள்ளது. மாணவியின் வாக்குமூலத்தை பதிவு செய்தவர் தலைமறைவாக உள்ளார். அவரும், செல்போனும் கிடைத்தால் தான் சம்பவத்தை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தி உறுதி செய்ய முடியும். அரசுத் தரப்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் வேண்டும்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதி, ‘‘வீடியோவை எடுத்த முத்துவேல், மாணவியின் பெற்றோர் ஆகியோர் இன்று வல்லத்திலுள்ள விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும். அப்போது சம்பந்தப்பட்ட செல்போனை போலீசாரிடம் வழங்க வேண்டும். செல்போன் மற்றும் வீடியோ சிடியை சென்னை மயிலாப்பூரிலுள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி அறிக்கை பெற வேண்டும். பிரேத பரிசோதனை தொடர்பான அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும்’’ எனக் கூறி விசாரணையை ஜன. 28க்கு தள்ளி வைத்தார்.

Related Stories: