தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த நான்கு மாதம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு

புதுடெல்லி:கடந்த 2019ம் ஆண்டு சங்கர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘ஊரக உள்ளாட்சிகளில் இடஒதுக்கீடு மற்றும் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வார்டு மறுவரையறையை தெளிவுபடுத்திய பின்னர் உள்ளாட்சி தேர்தலை தமிழகத்தில் நடத்த வேண்டும். அதுவரை புதியதாக வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அட்டவணையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்த கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, ‘தமிழகத்தில்; நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தி முடிக்க 4 மாதம் கூடுதல் அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருந்தது. தற்போது அது தொடர்பான அனைத்து வேலைகளிலும் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. மேலும் அங்கீகரிகப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கடந்த வாரம் கருத்தை கேட்டிருந்தது.

இந்த நிலையில் வழக்கின் பிரதான மனுதாரரான சங்கர் தரப்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில்,‘‘தமிழகத்தில் தற்போது கொரோனாவின் மூன்றாவது அலை பாதிப்பு இருந்து வருகிறது. அதனை கருத்தில் கொண்டு மாநிலத்தில் நகராட்சி தேர்தலை நடத்த கூடுதலாக நான்கு மாதம் அவகாசம் வழங்க வேண்டும். இதுதொடர்பான உத்தரவை மாநில தேர்தல் ஆணையத்திற்கும் பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையமும் மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் வழக்கு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: