வெஸ்ட் இண்டீசுடன் 2வது டி20: 1 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து த்ரில் வெற்றி

பிரிட்ஜ்டவுன்: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்  விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று முன்னிலை பெற்றது. கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த 2வது போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீசியது.

இங்கிலாந்து  20 ஓவரில்  8 விக்கெட் இழப்புக்கு 171 ரன் குவித்தது. ஜேசன் ராய் 45 ரன் (31 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), மொயீன் அலி 31 ரன் (24 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்),  கிறிஸ் ஜார்டன் 27 ரன் (15 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), டாம் பான்டன் 25 ரன் (18 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில்  ஜேசன் ஹோல்டர், பேபியன் ஆலன் தலா 2, காட்ரெல், அகீல், போலார்டு, ரொமாரியோ தலா 1 விக்கெட் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 15.1 ஓவரில் 98 ரன்னுக்கு 8 விக்கெட் இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. நிகோலஸ் பூரன் 24 ரன் (22 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) டேரன் பிராவோ 23 ரன் எடுக்க (20 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்), மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.   எனினும், ரொமாரியோ ஷெப்பர்ட் - அகீல் உசேன் ஜோடி 9வது விக்கெட்டுக்கு உறுதியுடன் போராட, ஆட்டத்தின் போக்கு திசை மாறியது. இங்கிலாந்து பந்துவீச்சை தவிடுபொடியாக்கிய இருவரும் சிக்சர்களாகப் பறக்கவிட்டு மிரட்டினர்.

கடைசி ஓவரில் 30 ரன் தேவைப்பட்ட நிலையில், சாகிப் மகமூத் பந்துவீச்சை எதிர்கொண்ட  அகீல் உசேன் 2 பவுண்டரி, ஹாட்ரிக் சிக்சர் விளாசினாலும்... வெஸ்ட் இண்டீஸ் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவ நேரிட்டது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது. ரொமாரியோ 44* ரன் (28 பந்து, 1 பவுண்டரி, 5 சிக்சர்), அகீல்  44* ரன்னுடன் (16 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  கடைசி 29 பந்தில் இருவரும் 72 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து தரப்பில் மொயீன் 3, அடில் ரஷித் 2, டாப்லி, ஜார்டன் தலா 1 விக்கெட் எடுத்தனர். மொயீன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது போட்டி நாளை நடைபெறுகிறது.

Related Stories: