வேலை வாங்கி தருவதாக ரூ.17 லட்சம் மோசடி எடப்பாடியின் மாஜி பி.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.17 லட்சம் மோசடி செய்ததாக கைதான முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளர் மணியின் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் மணி. இவரிடம் அரசு வேலைக்காக கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் 17 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார்.  முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமியிடம் உதவியாளராக மணி சில ஆண்டுகளாக இருந்துவந்ததை நம்பி பணம் கொடுக்கப்பட்ட நிலையில், வேலையும் வாங்கி கொடுக்காமல், பணத்தை மோசடி செய்துவிட்டதாக சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் தமிழ்ச்செல்வன் புகார் அளித்தார்.

மேலும், மணிக்கு பணம் அனுப்பியதற்கான ஆவணங்களையும் போலீசாரிடம் அவர் சமர்ப்பித்திருந்தார். தமிழ்ச்செல்வன் மட்டுமல்லாமல் மேலும் சிலரும் மணி மீது போலீசில் புகார் அளித்திருக்கின்றனர். இதுதொடர்பாக மணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த மணியை சேலம் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, தனக்கு ஜாமீன் கேட்டு மணி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தன் மீது புகார் பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், தான் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, மனுதாரர் மோசடி  செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட மணியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: