நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பா.ஜ தலைவர்கள் ஆலோசனை: அதிமுகவிடம் அதிக இடங்களை கேட்க முடிவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாஜ தலைவர்கள் பங்கேற்ற மையக்குழு கூட்டம் நேற்று நடந்தது. தமிழக பாஜவின் மய்யக்குழு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜ தலைவர் கே.அண்ணாமலை, மாநில இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மாநிலத் துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, நயினார் நாகேந்திரன், மாநில பொதுச் செயலாளர்கள் ராம ஸ்ரீனிவாசன், கே.நாகராஜன், மாநில அமைப்பு பொது செயலாளர் தேசிய விநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் வர உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக காரசார விவாதம் நடந்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு சந்திப்பது? வெற்றி வியூகம் மற்றும் வேட்பாளர்களாக யார், யாரை நிறுத்துவது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதே நேரத்தில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுகவிடம் அதிக இடங்களை கேட்டு பெறுவது என்றும் கூட்டத்தில் வலியுறுத்தினர். சட்டப்பேரவை தேர்தலை போல அல்லாமல் அதிமுகவிடம் அதிக சீட்களை கேட்டு பெறுவோம் என்று பாஜ தலைவர்கள் பலர் பேட்டியின் போது கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக மையக்குழுவில் விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: