ஈஞ்சம்பாக்கத்தில் அரசு நில ஆக்கிரமிப்பை அகற்றி நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஈஞ்சம்பாக்கம்  பகுதியில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள பெத்தேல் நகரில் உள்ள வணிக மற்றும் குடியிருப்பு சார்ந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கடந்த 2015ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி ஐ.ஹெச்.சேகர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளான அதிகாரிகள் தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் அறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜராகினர்.

 அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது சம்பந்தமாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும். உயர் நீதிமன்ற உத்தரவை எந்த நிலையிலும் அரசு அமல்படுத்தும் என்றார். அப்போது நீதிபதிகள், கடந்த 2015ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அரசு அமல்படுத்தவில்லை. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன என்றனர். அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள வணிக வளாகம் இடிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளுக்கு மாற்று இடம் தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுவிடும் என்றார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், மாற்று இடம் தந்தால் அதற்காகவே மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகும் என்றனர். அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், கடந்த 2018 முதல் ஆக்கிரமிப்புகள் எதுவும் இல்லை என்றார். அதற்கு நீதிபதிகள், நாட்டில் உள்ள எந்த பகுதியிலும் மேய்க்கால் புறம்போக்கு, நீர்நிலைகள், அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட கூடாது என்று பஞ்சாப்பை சேர்ந்த ஜஸ்பால் சிங் என்பவர் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். எந்த மேய்க்கால் பகுதியையும் வகை மாற்றம் செய்ய கூடாது. அதற்கான அதிகாரம் மாவட்ட கலெக்டர்களுக்கு இல்லை. மாநில அரசுக்குத்தான் உள்ளது. ஆனால், இங்கு ஆக்கிரமிப்பு செய்தவர்கள் கலெக்டர் உத்தரவின்படி நிலம் வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள். இதை அனுமதிக்க முடியாது, என்றனர்.

அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், அங்கு குடியிருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன,என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், அரசு நிலத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. அதிகாரிகள் துணை இல்லாமல் கட்ட முடியுமா, எனவே, ஆக்கிரமிப்பாளர்களுக்கு தரப்பட்டுள்ள மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி அது தொடர்பான அறிக்கையை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்ய வேண்டும். அன்றைய தினம் நீதிமன்ற அவமதிப்பு புகாருக்குள்ளான அதிகாரிகள் மீண்டும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories: