தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் பெண் குழந்தைகள் தின கொண்டாட்டம்

தாம்பரம்: தாம்பரம் சானடோரியம் தேசிய சித்த மருத்துவமனையில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வினாடி வினா, பாரம்பரிய உடை அணிவகுப்பு, பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் பற்றி கவிதை போட்டிகள், பெண் குழந்தைகள் பராமரிப்பில் சித்த மருத்துவத்தின் பங்கு என்ற தலைப்பில் பேச்சு போட்டிகள் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு, தேசிய சித்த மருத்துவமனையின் இயக்குநர் மீனாகுமாரி பரிசு வழங்கி, பேசியதாவது: பெண் குழந்தைகள் மஞ்சள் நீரில் குளித்தல், சரும பராமரிப்பிற்காக நலங்கு மாவு பயன்படுத்துதல், உடல் சூட்டை குறைத்து நன்னிலையில் இருக்க பஞ்சகற்ப குளியல், தளர்வான பருத்தி ஆடை அணிதல், யோகா முறையில் உடலை வலுப்படுத்த 8 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் யோகா மற்றும் ஆசனங்களை கற்றுக்கொண்டு தினமும் காலையில் செய்ய வேண்டும்.

மேலும் உணவில் எள், வேர்கடலை, உளுந்து, நாட்டுக்கோழி முட்டை, கீரைகள், கேழ்வரகு, பனை வெல்லம், வெந்தயம், பால் கொழுக்கட்டை, சிகப்பரிசி புட்டு, நெல்லி, மாதுளை, வாழைப்பழம், முளைக்கட்டிய பயறு வகைகள், வெண்பூசணி இவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள  வேண்டும். அதேபோல், சித்த மருந்துகளில் உரை மாத்திரை அதாவது குழந்தை பிறந்து 6 மாதம் முதல் 5 வயது வரை, மாதுளை மணப்பாகு, நெல்லிக்காய் லேகியம், குமரி லேகியம், அன்னபேதி செந்தூரம் போன்றவற்றை உடல் வலிமைக்காக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: