அதிமுக ஆட்சியில் நடந்த தவறுகளை சரி செய்வேன்: வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ். முருகன் பேச்சு

சென்னை: அதிமுக ஆட்சியில் நடந்த தவறுகளை சரி செய்வேன் என்று புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ். முருகன் கூறியுள்ளார். திமுக தலைமை நிலைய செயலராக பதவி வகித்து வரும் பூச்சி. எஸ். முருகனை வீட்டு வசதி வாரிய தலைவராக நியமித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று கோயம்பேடு சி.எம்.டி.ஏ அலுவலகத்தில் பூச்சி எஸ்.முருகன் வீட்டு வசதி வாரிய தலைவராக, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து நிருபர்களிடம் பூச்சி எஸ்.முருகன் பேசுகையில், ‘‘வீட்டு வசதி வாரிய தலைவராக என்னை நியமித்ததற்கு தமிழக முதல்வருக்கும் வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். கடந்த ஆறு மாதங்களாக கடந்த ஆட்சியில் நடந்த தவறுகளை சரி செய்யும் பணியை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுடன் துணை நின்று என் பணிகளை மேற்கொள்ளுவேன்’ என்று கூறினார்.

அவரை தொடர்ந்து வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி பேசுகையில், ‘‘சென்னையில் 193 இடங்களில் இருக்கக் கூடிய வாடகை குடியிருப்புகளில் 60 இடங்களில் வீடுகள் மோசமான நிலையில் உள்ளதாகவும், அவற்றை அனைத்தும் சரி செய்யும் பணி உடனடியாக மேற்கொள்ளப்படும். மேலும், குறிப்பாக சென்னை பட்டிப்பாக்கத்தில் புதிதாக வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சார்பில் மிக சிறப்பான கட்டிடம் கட்டப்பட உள்ளது’ என்றார்.

Related Stories: