6 மணி நேரம் தியானம், கடவுளிடம் பேசுவதாக கூறிய பஞ்சாப் காங். தலைவர் சித்துவுக்கு மூளை இல்லை: அமரீந்தர் பேட்டி.!

சண்டிகர்: கடந்த 2002ம் ஆண்டு முதல் பாட்டியாலா நகர்ப்புறம் தொகுதியில் வெற்றிப் பெற்றுவரும் அமரீந்தர், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். அவர், சித்துவுக்கு மூளையில்லை என்று தெரிவித்துள்ளார். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்களுடன் ஏற்பட்ட உள்கட்சி சண்டையால் அம்மாநில முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங், தனது முதல்வர் பதவி மற்றும் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினார்.

தொடர்ந்து பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கிய அமரீந்தர் சிங், தற்போது பாஜக மற்றும் சுக்தேவ் சிங் திண்ட்சாவின் சிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டுள்ளார். இந்நிலையில் பாட்டியாலா நகர்ப்புறம் தொகுதியில்  மீண்டும் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் கடந்த 2002ம் ஆண்டு முதல் இந்த தொகுதியில்  இருந்து வெற்றி பெற்று வருகிறார். தனது கட்சியின் சார்பில் 22 வேட்பாளர்களின் பெயரை வெளியிட்டு அவர் கூறுகையில், ‘பாட்டியாலா நகர்ப்புறம் ெதாகுதியில் மீண்டும் போட்டியிடுகிறேன்.

கடந்த 300 ஆண்டுகால உறவை பெற்றுள்ள எனது குடும்ப தொகுதியில் போட்டியிடுகிறேன். இந்த தொகுதியை தவிர மற்ற தொகுதியில் போட்டியிட மாட்ேடன். எனது ஆட்சியின் போது செய்த சாதனைகள், பிரதமர் மோடி அரசின் சாதனைகளை கூறி மக்களிடம் வாக்குகளை சேகரிப்பேன். மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு மூளை இல்லை; இந்த திறமையற்ற மனிதரை கட்சியில் சேர்க்க வேண்டாம் என்று சோனியா காந்தியிடம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே கூறினேன்.

தினமும் ஆறு மணி நேரம் தியானம் செய்வதாகவும், ஒரு மணி நேரம் கடவுளிடம் பேசுவதாகவும் என்னிடம் சித்து கூறினார். அவர் கடவுளுடன் என்ன பேசுகிறார்? என்று அறிந்து கொள்ள நான் அவரிடம் ஆர்வமாக கேட்டேன். அதற்கு அவர்​​​​நாம் எப்படி பேசுகிறோமோ? அதேபோல் தான் நானும் கடவுளிடம் பேசுகிறேன் என்று பதிலளித்தார். சித்துவுக்கு நிலையான புத்தி கிடையாது என்று சோனியா காந்தியிடம் கூறினேன். அப்படி இருந்தும் அவர்கள் சித்துவை கட்சியில் சேர்த்துள்ளனர்’ என்றார்.

சித்துவின் ஆலோசகர் மீது வழக்கு

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் முக்கிய ஆலோசகரும், மாநில அமைச்சர் ரசியா சுல்தானின் கணவரான பஞ்சாபின் முன்னாள் காவல்துறை இயக்குநர் முகமது முஸ்தபா, மலேர்கோட்லா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இவர் மலேர்கோட்வாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியுள்ளார்.

அதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மலேர்கோட்லா மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) ரவ்ஜோத் கவுர் கிரேவால் கூறுகையில், ‘சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் முகமது முஸ்தபா பேசிய வீடியோ கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். எங்களது தரப்பு அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளோம்’ என்றார்.

Related Stories: