×

சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனை அடைக்க 2 மாத பச்சிளங்குழந்தை ரூ80 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பேர் கைது

திருச்சி: திருச்சி உறையூர் காந்திபுரம் தேவர் காலனியை சேர்ந்தவர் அப்துல்சலாம்(40). இவரது மனைவி கைருன்னிசா(36). இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் ஆன கைருன்னிசா கடந்த 2 மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பெற்றெடுத்தார். இந்த குழந்தைக்கு முகமதுபாசில் என பெயரிட்டு வளர்த்து வந்தனர். கூலித்தொழிலாளியான அப்துல்சலாம், சரிவர வேலைக்கு செல்லாமல் கிடைக்கும் பணத்தில் சூதாடி வந்தார். கையில் பணம் இல்லாத போது அக்கம்பக்கத்தினர் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கி சூதாடினார்.

இதனால் அதிகளவில் கடனாளி ஆனார். கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு தொந்தரவு செய்தனர். மேலும், தன்னுடன் சூதாடிய தென்னூர் அண்ணாநகரை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவரிடம் வாங்கிய கடனால் அல்லல்பட்டு வந்தார். அவர் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தார். இந்நிலையில் வாங்கிய கடனை கொடுக்க முடியாத நிலையில் உள்ள அப்துல்சலாமிடம், வாங்கிய கடனை கொடுக்க வேண்டாம். மேலும், ரூ.80 ஆயிரம் தருகிறேன், உனக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளன.

தற்போது மேலும் ஒரு குழந்தை உள்ளதால் கஷ்டப்படுகிறாய். எனவே அந்த குழந்தையை என்னிடம் கொடுத்துவிடு. நான் குழந்தையை உறவினரிடம் கொடுத்து நன்றாக வளர்க்க கூறுகிறேன் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். இது குறித்து அப்துல்சலாம் தனது மனைவியிடம் கூறி அவரின் மனதை மாற்றினார். இதையடுத்து கடந்த 19ம் தேதி குழந்தையை ஆரோக்கியராஜிடம் விற்றுவிட்டனர். குழந்தையை பெற்ற ஆரோக்கியராஜ், இவரின் சகலையான பஞ்சப்பூரை சேர்ந்த பொன்னர் என்பவரின் தம்பி முசிறியை சேர்ந்த சந்தானமூர்த்தி என்பவரிடம் கொடுத்து வளர்க்க கூறினார்.

ஏற்கனவே சந்தானமூர்த்திக்கு குழந்தை பிறந்து இறந்ததால் ஏக்கத்தில் இருந்து வந்தார். இதற்கிடையில் கைருன்னிசா தனது குழந்தையை மீண்டும் தன்னிடமே வாங்கி கொடுத்துவிடும்படி கணவரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அப்துல்சலாம், மனைவியை தேற்றியுள்ளார். ஆனாலும் மகனை மற்றவர்களிடம் விட மனம் இல்லாத கைருன்னிசா, இதுகுறித்து உறையூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி புரோக்கராக செயல்பட்ட ஆரோக்கியராஜ், இவரது உறவினர்கள் பொன்னர், சந்தானமூர்த்தி ஆகியோரை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் குழந்தையை மீட்டு தாய் கைருன்னிசாவிடம் ஒப்படைத்தார்.

Tags : 2-month-old baby sold for Rs 80,000 to pay off gambling debt: 3 arrested
× RELATED மது விருந்தில் ஐடி ஊழியர் பலி......