சமுதாயரீதியாக கணக்கெடுத்து தொகுதி ஒதுக்கீடு செய்திடுக: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: சமுதாய ரீதியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதன்படி தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. மானாமதுரை நகராட்சி சேர்மன் பதவியை பட்டியலின மக்களுக்கு ஒதுக்கியதை எதிர்த்த வழக்கில் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு தொடங்கிவிட்ட சூழலில் தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. மக்கள் அனைவரிடமும் ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பை சமுதாய ரீதியாக எடுத்து அதன்படி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மானாமதுரை நகராட்சி சேர்மன் பதவியை பட்டியலின மக்களுக்கு ஒதுக்கி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பாக கடந்த ஜனவரி 17ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை சேர்ந்த காமராஜ் என்ற சின்னத்துரை மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் சிவகங்கை மாவட்ட மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் 3 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தற்போது மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திலிருந்து நகராட்சியாக மாற்றப்பட்டது. மானாமதுரை நகராட்சியில் 32,000 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 45 ஆண்டுகளாக மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திலிருந்து நகராட்சியாக மாற்றப்பட்டுள்ள சூழலில் பட்டியலின மக்கள் 5,760 பேர் உள்ளனர். ஆனால் மானாமதுரை நகராட்சியின் சேர்மன் பதவி பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்டதாக தமிழக அரசின் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே அரசாணையை ரத்து செய்ய கோரி உத்தரவிட வேண்டும் என கூறி இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, ஸ்ரீமதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. தமிழக தேர்தல் ஆணையம் தரப்பில் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி அப்பகுதியில் அதிக மக்கள் தொகை கொண்ட சமுதாயத்திற்கு விதிகளின் படி இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு தற்போது 2022ஆம் ஆண்டு தொடங்கிவிட்டது. தொழில்நுட்பமும் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துவிட்டது. மக்கள் அனைவரிடமும் ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் தொகை கணக்கெடுப்பு சமுதாய ரீதியாக எடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் இதுபோன்ற ஒதுக்கீடுகள் செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கு குறித்து தமிழக தேர்தல் ஆணையமும் தமிழக தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.

Related Stories: