3 மீனவர்களை கம்பியால் தாக்கி கடலில் தள்ளி விட்ட கொடூரம்: இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்

வேதாரண்யம்: வேதாரண்யத்தை சேர்ந்த 3 மீனவர்களை கம்பியால் தாக்கி, கடலில் தள்ளி விட்டு, படகில் இருந்த வலை உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர் கொள்ளையடித்து சென்றனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனத்தை சேர்ந்த நாகமணி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரை சேர்ந்த நாகமுத்து(44), பன்னீர்செல்வம்(48), ராஜேந்திரன்(54) ஆகியோர் நேற்று மதியம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நள்ளிரவு கோடியக்கரைக்கு தென் கிழக்கே 7 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பேர் ஒரு படகில் வந்தனர். அவர்கள் திடீரென புஷ்பவனம் மீனவர்களின் படகில் ஏறி 3 மீனவர்களையும் மிரட்டினர். மேலும் மீனவர்களை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியதுடன் கடலில் தள்ளி விட்டனர். இதைதொடர்ந்து புஷ்பவனம் மீனவர்களின் படகில் இருந்த 200 கிலோ வலை, ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, செல்போன், டீசல் வைத்திருந்த கேன் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். பின்னர் கடலில் தத்தளித்த 3 மீனவர்களும் நீச்சலடித்து மீண்டும் தங்களது படகில் ஏறினர். இதையடுத்து படகில் புஷ்பவனம் நோக்கி வந்தனர்.

ஆனால் பாதி வழியிலேயே டீசல் தீர்ந்து விட்டதால் நடுக்கடலில் தத்தளித்தனர். இதையடுத்து அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறி 2 லிட்டர் டீசலை வாங்கி நிரப்பி கொண்டு ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு இன்று அதிகாலை 5 மணிக்கு வந்து நடந்த சம்பவத்தை சக மீனவர்களிடம் தெரிவித்தனர். பின்னர்  108 ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொரு சம்பவம்: வேதாரண்யம் அடுத்த புஷ்பவனத்தில் இருந்து பைபர் படகில் கடலில் மீன் பிடிக்க 8 மீனவர்கள் சென்றிருந்தனர். நேற்று நள்ளிரவு நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது படகில் அந்த வழியாக வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 மீனவர்களையும் தாக்கி உள்ளனர். மேலும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து புஷ்பவனம் கடற்கரைக்கு 8 மீனவர்களும் இன்று காலை வந்தனர். இதுகுறித்தும் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நடுக்கடலில் தமிழக மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் பொருட்களை கொள்ளையடித்து செல்வது தொடர்கதையாகி வருகிறது. எனவே இதுகுறித்து ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: