சோழிங்கநல்லூரில் கடையை உடைத்து திருடிய 3 பேர் கைது: 2 லேப்டாப், 12 செல்போன் பறிமுதல்

துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூரில் ஒரு கடையை உடைத்து செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை திருடிய 3 பேரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி பாராட்டு தெரிவித்தார். சென்னை சோழிங்கநல்லூர், துரைசாமி தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் (30). இவர், அன்னை இந்திரா நகரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இதற்கிடையே, கடந்த மாதம் 13ம் தேதி இரவு ராஜேஷின் கடையை உடைத்து, அங்கிருந்த 5 செல்போன், 5 வாட்ச் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ₹3,500 ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசில் ராஜேஷ் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும், தாம்பரம் காவல் ஆணையரக கமிஷனர் மு.ரவி உத்தரவின்பேரில், செம்மஞ்சேரி உதவி கமிஷனர் கருணாகரன், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் தனிப்படையினர் தீவிரமாக விசாரித்தனர். இந்நிலையில், நேற்று மாலை சோழிங்கநல்லூர், காந்தி நகர், ஏரிக்கரை பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேக நிலையில் சுற்றிய 3 பேரை போலீசார் வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை செம்மஞ்சேரி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் ஆவடி, நந்தவனமேட்டூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (21), சஞ்சய் (23), ராகேஷ் (20) எனத் தெரியவந்தது. மேலும், இவர்கள் 3 பேரும் இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகள், கடைகளை உடைத்து விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளையடிப்பதை தொழிலாக செய்து வந்துள்ளனர். இதேபோல் ராஜேஷின் கடையை உடைத்து செல்போன் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்கள் கொள்ளையடித்ததாக தெரியவந்தது. மேலும், இவர்கள்மீது செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 3 பேரையும் செம்மஞ்சேரி போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 2 லேப்டாப், 12 செல்போன், 3 வாட்ச், ஸ்பீக்கர் பாக்ஸ் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 3 பேரையும் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை துரித கதியில் பிடித்த தனிப்படையினருக்கு தாம்பரம் காவல் ஆணையரக கமிஷனர் மு.ரவி பாராட்டு தெரிவித்தார்.

Related Stories: