கோவை அருகே பேரூராட்சி அலுவலகத்தில் விதிகளை மீறி புகுந்து பிரதமர் நரேந்திர மோடி உருவப்படத்தை மாட்டிய பாஜக நிர்வாகி கைது..!!

கோவை: கோவை அருகே பேரூராட்சி அலுவலகத்துக்குள் விதிகளை மீறி புகுந்து பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை மாட்டிய பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை அடுத்துள்ள பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்துக்குள் புகுந்த பாஜக அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தினர் எவ்வித அனுமதியும் பெறாமல் அங்கிருந்த சுவற்றில் ஆணியை அடித்து மோடியின் படத்தை மாட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த பேரூராட்சி அலுவலக ஊழியர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்துள்ளனர். ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் பாஜகவினர் மோடியின் புகைப்படத்தை சுவற்றில் மாட்டியுள்ளனர்.

இந்த வீடியோ காட்சி தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அனுமதியின்றி அலுவலகத்திற்குள் புகுந்து புகைப்படம் மாட்டுவது தவறு எனவும் மாஸ்க் அணியாமல் அலுவலகத்திற்குள் வரக்கூடாது எனவும் பேரூராட்சி ஊழியர்கள் அவர்களிடம் எடுத்து கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் பிரதமர் மோடியின் படத்தை கழற்றினால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்தனர். இதனை தொடர்ந்து பேரூராட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஆலந்துறை போலீசார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போராட்டத்துக்கு தலைமை வகித்த பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Related Stories: