ரூ.24 கோடி செலவில் பொலிவு பெறுகிறது கொடைக்கானல் ஏரி

கொடைக்கானல் : கொடைக்கானல் ஏரியை அழகுபடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு 24 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது என நகராட்சி ஆணையாளர் நாராயணன் தெரிவித்தார்.திண்டுக்கல் மாவட்டத்தின் பிரபல சுற்றுலாத்தலமான கொடைக்கானல் நகரின் மையப்பகுதியில் உள்ள ஏரி, சுற்றுலாப்பயணிகள் விரும்பி ரசிக்கும் இடங்களில் முக்கியமானது. இந்த ஏரியை ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் ஹென்றி லிவின்ச் உருவாக்கினார். 5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த ஏரி கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் முறையான பராமரிப்பின்றி மாசடைந்தது. இந்த ஏரியை தூய்மையாக்க பல ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சி காலத்தில் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் வெறும் அறிவிப்பாகவே ஏரி தூய்மைப் பணி இருந்தது.

தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, கொடைக்கானல் ஏரியை அழகுபடுத்த 24 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஏரி அழகுபடுத்தும் தொழில்நுட்ப பணி ஒப்புதலுக்காக உள்ளது. விரைவில் பணி தொடங்க உள்ளது. கொடைக்கானல் ஏரி நன்னீர் ஏரி என்ற அளவிற்கு தூய்மைப்படுத்தப்பட உள்ளது. ஏரியைச் சுற்றி அலங்கார மின் விளக்குகள், அழகான நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளன.

ஏரியைச் சுற்றி அமைந்துள்ள கொடைக்கானல் நகராட்சி படகு குழாம் உள்ளிட்டவைகளும் அழகுபடுத்தப்படவுள்ளன. இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் கொடைக்கானல் ஏரி தனது பழைய நிலையை அடையும். அதாவது, ஏரி தண்ணீரை குடிநீராக கூட பயன்படுத்த முடியும், அந்த அளவிற்கு இந்த பணி நடைபெறும் என நகராட்சி ஆணையாளர் நாராயணன் தெரிவித்தார்.

Related Stories: