பருவமழை பாடம் புகட்டியும் பலனில்லை குமரியில் தொடர்ந்து வீட்டுமனைகளாக மாறும் வயல்கள்-கடிவாளம் போடுமா மாவட்ட நிர்வாகம்?

நாகர்கோவில் : குமரியில் தொடர்ந்து வீட்டு மனைகளாக மாறும் வயல்களால் நெல் விவசாயம் கேள்விக் குறியாகும் நிலை உருவாகியுள்ளது.குமரி மாவட்டம் இரு பருவ மழைகள் பெறுவதால், எப்போதும் செழுமை மிகுந்த மாவட்டமாகும். தோவாளை, அகஸ்தீஸ்வரம் தாலுகாக்களில் அதிகளவிலும், அதனை தொடரந்து கல்குளம் தாலுகா மற்றும் குருந்தன்கோடு, ராஜாக்கமங்கலம் வட்டார பகுதிகளில் அதிகளவு நெல் பயிரிடப்பட்டு வந்தது.

இதில், தோவாளை, அகஸ்தீஸ்வரம் தாலுகாக்க பகுதிகளில் நெல் விளைச்சல் காரணமாக நாஞ்சில் நாடு என அழைக்கப்படுகிறது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளில், நெல் விவசாய நிலங்கள், வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. சுங்கான்கடை தொடங்கி, தோவாளை வரையிலும், அருமநல்லூர் தொடங்கி பீமநகரி வரையிலும், பச்சை பசேல் என நாற்றுகள் முளையிட்ட வயல்களில், உவர்மண்கள் கற்களுடன் கொட்டப்பட்டு, அப்படியே அழிக்கும கொடூரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனால், அருகில் உள்ள வயல்களில் உள்ள நெற்பயிர்களும், அதிக உவர் தன்மை மற்றும் தண்ணீர் கிடைக்காமல், அழிந்து வருகின்றன. பொதுவாக குறைந்தது 3 ஆண்டுகள், தண்ணீர் வர வழியின்றி, தரிசாக கிடக்கும் நிலங்களில் மட்டுமே வீட்டு மனையாக்கலாம். ஆனால், அதையும் மீறி வயல்பகுதிகள் வீட்டு மனைகளாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் பெய்த தொடர் மழையின் போது, வீட்டு மனைகளாக மாறிய வயல்களில் மட்டுமே 100 சதவீதம் பல அடி உயரத்திற்கு தண்ணீர் புகுந்து, மக்களை உயிர் பயம் கொள்ள செய்தது. மேலும் காப்பாற்ற உதவிகள் கேட்டு, படகுகள் மூலம் மீட்ட சம்பவங்கள் நடந்தன.

 ஆனாலும், தற்போது மழை விட்ட நிலையில், பீமநகரி உள்பட பல பகுதிகளில் வயல்களில் மண்ணை கொட்டி, வீட்டு மனைகளாக மாற்றும் சம்பவங்கள் தொடருகின்றன. ராஜேந்திர ரத்னு கலெக்டராக இருந்த ேபாது குமரி மாவட்டத்தில் வயல்களில் கொட்டிய மண்ணை அகற்ற உத்தவிட்டதுடன், வீட்டு மனையாக பத்திரங்கள் பதிவு செய்ய தடை விதித்தார். கடந்த இரு ஆண்டுகள் முன்பு உயர்நீதிமன்றம் விளைநிலங்களை வீட்டுமனையாக மாற்ற தடை விதித்தது.

அப்போது, ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் ஏற்கனவே மாற்றப்பட்ட வீட்டு மனைகளுக்கு அனுமதி தரும்படியும், இனிமேல, வயல்களில் வீட்டு மனைகள் மாற்றப்படமாட்டாது என்றனர். ஆனால், தற்போது உயர்நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்டு விட்டு, மீண்டும், வயல்கள் உள்ளிட்ட விளைநிலங்கள் வீட்டு மனையாக மாற்றப்பட்டு வருகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து, தற்போது வயல்களில் கொட்டப்பட்ட, உவர் மண்களை அகற்றி மீண்டும் விளைநிலமாக தொடர நடவடிக்கை மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வயலே இல்லாத நெற்களஞ்சியம்

நாகர்கோவிலில் ஒழுகினசேரி பாலம் தாண்டியதும் பச்சை பசேல் வயல்கள் தோவாளை வரை சாலையின் இரு புறங்களிலும், காணப்படும். கோட்டாறு பறக்கை சந்திப்பை கடத்து, ரயில்நிலைய சாலை முதல் கொட்டாரம் வரையிலும், மணக்குடி சாலையில் இளங்கடையை கடத்ததும் இருபுறமும், ராஜாக்கமங்கலம் சாலையில் கோணம் தாண்டியதும் வயல்கள் நம்மை கொள்ளை கொள்ளும். வடக்கு மார்க்கத்தில் புத்தேரி குளம் முதல் இருபுறமும் கண்ணிற்கு எட்டிய தூரம் வரையிலும் வயல்கள் காணப்படும்.

ஆனால், தற்போது இந்த சாலைகளில் இருபுறமும் நெல்வயல்கள் முற்றிலுமாக அழிந்து விட்டன. புத்தேரி, பறக்கை சாலையில் மொத்தமாக நெல் வயல்கள் அழிந்துவிட்டன. தற்போது ஆளூர் சாலை, பீமநகரி, தேரூர் புதுக்கிராமம், சுசீந்திரம் பகுதிகளும் வேகமாக அழிவை சந்தித்து வருகின்றன. பீமநகரி சாலையில், கடந்த சில மாதங்களில், நாக்கால்மடம் விலக்கு முதல் தாழக்குடி பெரிய குளம் வரை வயல்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றன.

கர்நாடகத்தை பின்பற்ற வேண்டும்

கர்நாடக மாநிலத்தில் விவசாயம் செய்யாமல் இருந்தால், அந்த வயல் பறிமுதல் செய்யப்பட்டு, வேறு விவசாயிக்கு வழங்கப்படும். இது போல், ஆறு குளங்களில், இதர பயன்பாட்டிற்கு மண்எடுக்க முடியாது. இதனால், அங்கு விவசாயம் செழிப்பாக உள்ளது. கேரளத்திலும் கூட, இதே நிலைதான். ஆனால், தமிழகத்தில் மட்டும் தான், பசும்வயல்களை வீட்டுமனைகளாக மாற்றுவதும், ஆறு, குளங்களில் மண் அள்ளி நீர்வளத்தை பாதிக்க செய்வதும், குவாரிகள் மூலம் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு கனிமங்களை கடத்துவதும் தொடர்ந்த படியே உள்ளன. பாரபட்சமின்றி இதற்கு முட்டுகட்டை விதிப்பது அவசியம் என்பது விவசாய ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.

Related Stories: