குமரி - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு ஊரடங்கால் எளிமையாக நடந்த திருமணங்கள்-சாலைகளில் சுற்றி திரிந்தவர்களுக்கு சளி பரிசோதனை

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் ஊரடங்கு நாளில் சுற்றி திரிந்தவர்களுக்கு நேற்று சளி பரிசோதனை நடத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக நேற்று நடந்த திருமணங்கள் எளிமையாக நடந்து முடிந்தன.தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இது தவிர ஞாயிறுதோறும் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று (ஞாயிறு) 3 வது வாரமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. குமரி மாவட்டத்திலும் ஊரடங்கையொட்டி நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி உள்பட மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணித்தனர். கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஜவுளி, நகை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. காலையில் வெளியூர்களில் இருந்து வந்தவர்களின் வசதிக்காக பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் ஆட்டோக்கள், வாடகை கார்கள் இயங்கின. காலை 10 மணிக்கு பின் அவைகளும் இயங்க வில்லை. பெட்ரோல் பங்க்குகள், மெடிக்கல் ஸ்டோர்கள், ஆவின் பாலகங்கள் வழக்கம் போல் இயங்கின. ஓட்டல்கள் திறக்கப்பட்டு பார்சல் மட்டும் வினியோகம் செய்யப்பட்டது.

நேற்று முகூர்த்த நாள் என்பதால் மாவட்டத்தில் ஏராளமான திருமண நிகழ்ச்சிகள் நடந்தன.  மண்டபங்களில் நடந்த திருமண நிகழ்ச்சிகளிலும் குறைந்த  அளவிலான உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர். சுகாதார துறை சார்பில் திருமணம் நடந்த மண்டபங்களில் சோதனை நடந்தது. வீடுகளிலும் எளிமையான முறையில் திருமணம் நடத்தினர். திருமண நிகழ்ச்சிகளுக்கு சென்றவர்கள் அழைப்பிதழ் காட்டி சென்றனர். கடந்த இரு வாரங்களை போல் இல்லாமல் நேற்று அதிகளவில் வாகனங்கள் சாலைகளில் சென்றதை காண முடிந்தது.

நாகர்கோவிலில் வடசேரி,  கோட்டார் பகுதிகளில் தேவையின்றி சுற்றி திரிந்த இளைஞர்களுக்கு கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டது. இது தவிர ஆட்டோ டிரைவர்கள், தொழிலாளர்கள், உணவு வினியோக ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுத்தனர். கடந்த இரு வாரங்களாக, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆம்னி பஸ்கள் இயங்கின. இது தொடர்பாக வந்த புகார்களை தொடர்ந்து ஆம்னி பஸ்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது.

இதனால் நேற்று ஆம்னி பஸ் நிலையமும் வெறிச்சோடி கிடந்தது. வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையம், மீனாட்சிபுரத்தில் உள்ள அண்ணா பஸ் நிலையமும் வெறிச்சோடி காணப்பட்டது. ஆதரவற்றவர்கள், முதியவர்கள் மட்டும் ஆங்காங்கே பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் சார்பில் மதிய உணவு வினியோகம் செய்யப்பட்டது. முக்கிய கோயில்களில் அன்னதானம் பார்சலாக வினியோகம் செய்யப்பட்டது. நாகர்கோவில் நாகராஜா கோயிலில் நேற்று மதியம் வினியோகம் செய்யப்பட்ட உணவு பார்சல்களை ஏராளமானவர்கள் வாங்கி சென்றனர்.  

ஊரடங்கையொட்டி டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததால், ஆங்காங்கே திருட்டு மது விற்பனை நடைபெற்றது. இது தொடர்பான புகார்களை தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  ஊரடங்கையொட்டி மாநில எல்லைகளிலும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ள அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி குமரி - கேரள எல்லையான களியக்காவிளை பகுதியில் நேற்று போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். அத்தியாவசிய வாகனங்களை சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.

வாகனங்களில் கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது. கேரளாவில் நேற்று ஊரடங்கிற்கு இணையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால், அங்கிருந்து அத்தியாவசிய வாகனங்கள் மட்டும் வந்தன. இதே போல் குமரி மாவட்டத்தில் இருந்தும் மருத்துவம் உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்காக சென்ற வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. கேரளாவில் இருந்து வந்தவர்களுக்கு சளி பரிசோதனையும் களியக்காவிளை சோதனை சாவடியில் நடத்தப்பட்டது.

ஊரடங்கையொட்டி  ஓட்டல்களில் பார்சல்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. பெரிய ஓட்டல்களில் ஆன்லைன் ஆர்டர்கள் இருந்தன. சாதாரண ஓட்டல்களில் விற்பனை இல்லை. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் வியாபாரத்தில் 10 சதவீதம் கூட நடைபெற வில்லை என்று ஓட்டல் உரிமையாளர்கள் கூறினர். பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால், குறைந்த அளவு மட்டுமே பார்சல்கள் சென்றதாக கூறினர்.

திருமண வீட்டாருக்கும் சளி பரிசோதனை

நாகர்கோவிலில் வடசேரி, கோட்டார் பகுதிகளில் சுற்றி திரிந்தவர்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சளி பரிசோதனை நடந்தது. இதில் திருமண வீடுகளுக்கு சென்ற ேஜாடிகளுக்கும் சளி பரிசோதனை நடத்தினர். அவர்களும் ஆர்வமாக சளி பரிசோதனைக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். சளி பரிசோதனை கொடுத்தவர்களின் பெயர், செல்போன் விபரங்கள் பதிவு செய்யப்பட்டன.

Related Stories: