சென்னை வடபழனி முருகன் கோயிலில் தமிழிசை செளந்தரராஜன் சுவாமி தரிசனம்!: பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தல்..!!

சென்னை: சென்னை வடபழனி முருகன் கோயிலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சுவாமி தரிசனம் செய்தார். 14 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சென்னை வடபழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு விமர்சியாக நடைபெற்றது. ஆனால் கொரோனா பரவல் மற்றும் முழு ஊரடங்கு காரணமாக குடமுழுக்கு விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனிடையே இன்று முதல் வரும் 27ம் தேதி வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று கோயில் நிர்வாகம் அறிவிந்திருத்த நிலையில், காலை 5 மணி முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இதில், தமிழிசை செளந்தரராஜனும் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா இல்லாத நிலையை உருவாக்க அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க முடியும் எனவும் குறிப்பிட்டார். யாரெல்லாம் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளீர்களோ அவர்கள் எல்லாம் தயவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்.

தடுப்பூசி செலுத்தி கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். நோய் அண்டும் போதும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுத்தாது. தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் கொரோனா இல்லாத நிலையை உருவாக்க முடியும் என்றும் தமிழிசை தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சாமி தரிசனம் செய்தேன். கொரோனா இல்லாத உலகத்திற்காக வேண்டிக்கொண்டேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: