பனைகள் வெட்டுவதை தடுக்க வேண்டும்-சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருச்சுழி : திருச்சுழி பகுதியில் பயன்கள் நிறைந்த பனை மரங்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இயற்கை நமக்கு தந்த பெரும் கொடைகளில் ஒன்று பனைமரம். தண்ணீரே இல்லாத இடத்தில் கூட வளரும் இந்த மரம் மனிதர்களுக்கு சலிப்பின்றி பலன் தரக்கூடியது. தற்போது அழிக்கப்பட்டு வரும் இந்த மரங்களைக் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

பனை மரத்துக்கு தமிழ்மரம் என்று பெயரும் உண்டு. இம்மரத்திலிருந்து கிடைக்கும் ஒவ்வொன்றும் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. பதநீர்,பனை வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனநுங்கு என சத்து மிகுந்த உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுப்பொருள்கள் பனை மரத்திலிருந்து கிடைக்கின்றன. அத்துடன் இதன் ஓலை மற்றும் மட்டைகளைக் கொண்டு அழகுப் பொருள்களும், விசிறி மட்டைகளும் தயாரிக்கப்படுகின்றன.

பனை ஓலை வீட்டுக்கு மேற்கூரை அமைக்க பயன்படுகிறது. இவ்வாறு பயன்கள் நிறைந்த பனை மரங்கள் தற்போத பெருமளவில் வெட்டி சாய்க்கப்படுகின்றன. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி பகுதியில் உள்ள விடத்தக்குளம், புதூர், குச்சம்பட்டி உள்பட பல கிராமங்களில் 20 வருடங்களுக்கு முன்பாக பல ஆயிரக்கணக்கான மரங்கள் இருந்து வந்தன. மழை, வெள்ளங்களில் குண்டாறு உடைப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காகவும், மண்ணின் தன்மை மாறாமல் இருப்பதற்காகவும் பனை மரங்களை வளர்த்தவர்கள் தற்போது ஏராளமான பனை மரங்களை வெட்டி சாய்த்து வருகின்றனர்.

இதேபோல் செங்கல் சூளைகளுக்காகவும் பனை மரங்கள் வெட்டப்படுகின்றன. இம்மரங்கள் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளோ கண்டுகொள்ளாமல் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக கோடை காலங்களில் பனை நுங்கு விற்பனை செய்யும் தொழிலாளிகள், தற்போது முற்றிலும் பனை ஏறும் தொழிலை மறந்து மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர்.

முன்பெல்லாம் கோடை காலங்களில் நாள்தோறும் பனை நுங்கு விற்பனை அதிகமாக இருக்கும். தினமும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு குறையாமல் வருமானம் கிடைக்கும். நுங்கு சாப்பிடுவதால் உடல்சூடு தணிகிறது. பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னை இருக்காது. குழந்தைகளுக்கும் பனை நுங்கை கொடுக்கலாம், பனை நுங்கை வெட்டி பிரித்தெடுத்தது போக மீதமுள்ள ஓடுகளை நிலத்தில் கொட்டி, உரமாக பயன்படுத்தினால் நிலத்தின் உப்புத்தன்மை சரியாகி விடும் என கூறுகின்றனர்.

பனைத்தொழிலாளிகள் இத்தகைய நன்மைகள் அளிக்கும் பனை மரங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுப்பதுடன், மின்பாதைகள் அமைக்க பனை மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க வேண்டும். பனையிலிருந்து கிடைக்கக் கூடிய மூலப்பொருள்களை கொண்டு தயாரிக்கப்படும் மருத்துவ குணம் நிறைந்த பொருள்களை சந்தைப்படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: