சேலம் உள்பட 8 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி மையத்தில் ஆசிரியர்கள் கள பரிசோதனை-பயிற்சி நிறுவனங்களுக்கு உத்தரவு

சேலம் : அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவு பாடப்பொருள் குறித்து, சேலம் உள்பட 8 மாவட்டங்களில் உள்ள இல்லம் தேடி கல்வி மையத்தில் கள பரிசோதனை நடக்கிறது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால், மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை போக்கும் வகையில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி மாணவர்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே, மாலை நேரங்களில் தன்னார்வலர்கள் மூலம் கற்றல், கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக  மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான இல்லம் தேடி கல்வி மையங்கள் அமைக்கப்பட்டு, அங்கு பணிபுரிய தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

 

இதனிடையே, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள பாடப்பொருட்களை இல்லம் தேடி கல்வி மைய மாணவர்களிடம் கள பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், எண்ணும் எழுத்தும் சார்ந்து, தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடத்திற்கான அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு பாடப்பொருளை உருவாக்கி வருகிறது.

அந்த பாடத்தொகுப்பிற்குள் ஒன்றை, இல்லம் தேடி கல்வி மையத்தில் 1 முதல் 3ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் களப்பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 19ம் தேதி தொடங்கிய களபரிசோதனை, வரும் 24ம் தேதி வரை நடக்கிறது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் களபரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அச்சடித்து வழங்கப்பட்டுள்ள பாடப்பொருளைக் கொண்டு, ஆசிரிய பயிற்றுநர்கள் மேற்பார்வையில், ஆசிரியர்கள் கள பரிசோதனை மேற்கொள்கின்றனர்.

முதற்கட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 மையங்கள், கிருஷ்ணகிரியில் உள்ள 9 மையங்கள், மதுரையில் 6 மையங்கள், மயிலாடுதுறையில் 5 மையங்கள், சேலம் மாவட்டத்தில் 7 மையங்கள், திருச்சியில் 8 மையங்கள், திருவண்ணாமலையில் 8 மாவட்டங்கள், விழுப்புரத்தில் 6 மையங்கள் என மொத்தம் 8 மாவட்டங்களில், 54 மையங்களில் களபரிசோதனை நடக்கிறது. களபரிசோதனை முடிந்து அதன் பின்னூட்டங்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,’’ என்றனர்.

Related Stories: