தேவதானப்பட்டி அருகே அடிப்படை வசதி இல்லாமல் மலைக்கிராம மக்கள் அவதி-மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பெரியகுளம் : தேவதானப்பட்டி அருகே, அடிப்படை வசதியின்றி மலைக்கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரியகுளம் அருகே, தேவதானப்பட்டி பேரூராட்சியில் மஞ்சளாறு கிராமம் உள்ளது. இக்கிராமத்தின் அருகே, மலைப்பகுதியில் காந்திநகர் என்னும் மலைக்கிராமம் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கியதால், 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இப்பகுதியில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமத்தின் குடிநீர் தேவைக்காக மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும் குடிநீர் விநியோகம் செய்வதாக தெரிவிக்கின்றனர். மேலும், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி ஆகியவை போதிய அளவில் இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர். குடிநீருக்காக தினசரி 2 அல்லது 3 கி.மீ தூரம் சென்று குடங்களில் பிடித்து வருவதாக தெரிவிக்கின்றனர். எனவே, காந்திநகர் மலைக்கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மலைக்கிராம மக்கள் கூறுகையில், ‘எங்கள் கிராமம் அருகே உள்ள மஞ்சளாறு அணையில் நீர் நிரம்பியிருந்தாலும், அதை பிடிக்க 3 கி.மீ தூரம் செல்ல வேண்டும். இது குறித்து தேவதானப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, காந்திநகர் கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: