பக்தர்களுக்கு தரமான பிரசாதம் வழங்கியதற்காக தமிழகத்திலுள்ள 314 கோயில்களுக்கு BHOG தரச்சான்றிதழ்கள்: முதல்வர் வாழ்த்து

சென்னை: தமிழகத்திலுள்ள 314 திருக்கோயில்கள் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட BHOG தரச்சான்றிதழ்கள் பெற்றமைக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருக்கோயில் செயல் அலுவலர்களை பாராட்டி, தரச்சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

இதுதொடர்பாக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழகத்திலுள்ள 314 திருக்கோயில்கள், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட BHOG தரச்சான்றிதழ்கள் பெற்றமைக்காக, திருக்கோயில்களின் செயல் அலுவலர்களை பாராட்டும் விதமாக, மயிலாப்பூர்- அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு- அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருத்தணி - அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை – அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், சென்னை, தங்கசாலை - அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், திருமுல்லைவாயில் – அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், திருப்போரூர் – அருள்மிகு கந்தசாமி திருக்கோயில், மகாபலிபுரம் – அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில், சென்னை – அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், சென்னை – அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களின் இணை ஆணையர் / செயல் அலுவலர்களை பாராட்டி, தரச்சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினார்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது 754 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் பழனி - அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம் - அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் - அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சமயபுரம் - அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மற்றும் திருத்தணி - அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகியவற்றில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ரூ.76 கோடி செலவில் 754 திருக்கோயில்களில் நாள் ஒன்றுக்கு 70,000 பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

இந்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுபாட்டு நிறுவனம், நாடு முழுவதும் உணவு தயாரித்து வழங்கிடும் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை பரிசோதித்து தரச்சான்றிதழ் வழங்கும் பணியினை செய்து வருகிறது. இந்நிறுவனம் மத வழிபாட்டு தலங்களில் தயாரிக்கப்பட்டு இறைவனுக்கு படைக்கப்படும் பிரசாத வகைகளை பரிசோதித்து கடவுளுக்கு சுத்தமான சுகாதாரமான பிரசாதம் படைத்தல் (BHOG-Blissful Hygienic Offering to God) சான்றிதழ்களை வழங்கி வருகிறது.

திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதான உணவு வகைகள் சுத்தமாகவும் சுகாதாரத்துடனும் தயாரிக்கப்படுவதை பரிசோதனைக்குட்படுத்தி இந்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் தரச்சான்றிதழ்கள் 6 திருக்கோயில்களுக்கு மட்டுமே பெறப்பட்ட நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், அரசின் சீரிய முயற்சியால் 308 திருக்கோயில்களுக்கு தரச்சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், 440 திருக்கோயில்களுக்கு சான்றிதழ்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் 394 மத வழிபாட்டு தலங்களுக்கு மட்டுமே இச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசால் 314 திருக்கோயில்களுக்கு இச்சான்றிதழ் பெறப்பட்டு தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இதன் மூலம் திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் சுத்தமாகவும், சுகாதார முறையிலும் தயாரித்து வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்புப் பணி அலுவலர் முனைவர் பி. செந்தில்குமார், இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: