திருச்சியில் பணத்திற்காக குழந்தையை விற்ற தந்தை உள்பட 3 பேர் கைது

திருச்சி: திருச்சியில் பணத்திற்காக குழந்தையை விற்ற தந்தை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி உறையூரை சேர்ந்தவர் அப்துல் சலாம். இவருக்கு சைரும் நிஷா என்கிற மனைவியும் 5 குழந்தைகளும் உள்ளனர். அப்துல் சலாம் கூலி வேலை செய்யக்கூடியவர். இவர் முறையாக வேலைக்கு செல்லாமல் இருந்ததால் பணத்தேவைக்காக தன்னுடைய நண்பர் ஆரோக்கிய ராஜ் என்பவரிடம் சுமார் ரூ.80,000 வரை பல தவணைகளாக கடன் வாங்கியுள்ளார். இந்த கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் அப்துல் சலாம் இருந்துள்ளார். இந்த நிலையில் தான் அப்துல் சலாமுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தன்னுடைய உறவினர் ஒருவருக்கு குழந்தை இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் குழந்தையை விற்றால் பணம் கிடைக்கும் என்று ஆரோக்கிய ராஜ் அப்துல் சலாமிடம் கூறியுள்ளார். இதனை கேட்ட அப்துல் சலாம் தன்னுடைய மனைவியிடம் இதுகுறித்து பேசியுள்ளார்.

மனைவி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு தெரியாமல் அந்த குழந்தையை எடுத்துக்கொண்டு தூக்கிச்சென்று ஆரோக்கிய ராஜின் உறவினர் சந்தனகுமார் என்பவரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு அவரிடம் இருந்து ரூ.80,000 பணம் பெற்று அதனை ஆரோக்கிய ராஜிடம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அப்துல் சலாமின் மனைவிக்கு தெரிந்தவுடன் குழந்தையை கொண்டுவருமாறு கேட்கும்போது அவர் மறுப்பு தெரிவிக்கிறார். இதனையடுத்து சைரும் நிஷா உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். இந்த புகாரின் பேரில் விசாரணை செய்த காவல்துறையினர் இந்த சம்பவம் உண்மை என்று தெரிந்ததின் அடிப்படையில் குழந்தையின் தந்தை அப்துல் சலாம், குழந்தையை வாங்கிய சந்தனகுமார், இதற்கு காரணமாக இருந்த ஆரோக்கிய ராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். குழந்தையை மீட்டு தாய் சைரும் நிஷாவிடம் ஒப்படைகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: