சித்தூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 4 உருது ஆசிரியர்களுக்கு விருது-எம்எல்ஏ வழங்கினார்

சித்தூர் : சித்தூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 4 உருது ஆசிரியர்களுக்கு எம்எல்ஏ விருது வழங்கினார். சித்தூர் பஜார் தெருவில் உள்ள ஜெய்ஹிந்த் அரசு உருது பள்ளியில் எம்எல்ஏ ஜங்காளப்பள்ளி சீனிவாசலு தலைமையில் சிறந்த 4 ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடந்தது.பின்னர், எம்எல்ஏ ஜங்காளப்பள்ளி சீனிவாசலு பேசியதாவது: முதல்வர் ஜெகன்மோகன் ஆந்திர மாநிலத்தில் அனைத்து துறையை சேர்ந்த சிறந்த அரசு ஊழியர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கி வருகிறார். அதேபோல் கடந்தாண்டு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா அமராவதியில் விமரிசையாக நடந்தது.

இதில் சித்தூர் மாவட்டத்தில் பல்வேறு துறையைச் சேர்ந்த சிறந்த அரசு ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதேபோல் மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் சிறப்பாக பணியாற்றிய 4 உருது ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இவர்கள் மாணவ, மாணவிகளுக்கு சிறந்த முறையில் கல்வி கற்றுக் கொடுத்தார்கள் அதுமட்டுமல்லாமல் அவர்கள் பணியாற்றும் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை சொந்த செலவில் ஏற்படுத்தி தந்தார்கள். அவர்கள் கல்வி கற்பிக்கும் பள்ளியில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற மாபெரும் பாடுபட்டார்கள்.

இதனால் மாநில அரசு சித்தூர் மாவட்டத்தில் உருது பள்ளி ஆசிரியர்களை சிறந்த ஆசிரியர்களாக 4 பேரை தேர்ந்தெடுத்தது. அதில், குப்பம் பள்ளி ஆசிரியர்கள் மெஹபூப் பாஷா, பர்வீன் பேகம்,  பலமறேனர் பள்ளி ஆசிரியர் அஸ்ஸலாம் பாஷா, சித்தூர் அரசு பள்ளி ஆசிரியர் முக்தார் அகமது ஆவர். மேலும் மேலும் அவர்கள் பணிபுரியும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு சிறந்த கல்வியை சிறந்த ஒழுக்கத்தை கற்றுத் தர வேண்டுமென தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசிரியர்கள் ஆசிரியர்களாகவே பணியாற்றி வருகிறார்கள். ஆனால் அவர்கள் கல்வி கற்பித்த மாணவர்கள் மட்டும் கலெக்டராகவும், போலீஸ் அதிகாரிகளாகவும், அரசு துறையில் பல்வேறு அதிகாரிகளாகவும், விஞ்ஞானிகள் ஆகவும் பணியாற்றி வருகிறார்கள். ஆகவே மாணவர்களும் ஆசிரியர்கள் கற்பித்து தரும் பாடத்தை நன்றாக கவனித்து ஆசிரியர்கள் சொல்லும் அறிவுரைகளை கேட்டு சிறப்பாக படித்து முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட முஸ்லிம் சிறுபான்மை துறை அதிகாரி சென்னா ரெட்டி, கண்ணன் ஜூனியர் கல்லூரி முதல்வர், சித்தூர் பி சிஆர் கல்லூரி பேராசிரியர் அப்துல் மஜீத் உள்பட ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: