கொரோனா தொற்றின் 3வது அலை பிப்ரவரி 6-க்குள் உச்சம் அடையும் : சென்னை ஐஐடி கணிப்பு!!

சென்னை : கொரோனா தொற்றின் 3வது அலை அடுத்த 2 வாரங்களில் உச்சம் அடையும் என்று சென்னை ஐஐடி கணித்துள்ளது. இந்தியாவில் டெல்டா, ஒமிக்ரான் வைரஸ்களின் பரவலால் 3வது அலை தீவிரம் அடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் தினசரி தொற்று தற்போது நாள் ஒன்றுக்கு 3 லட்சம் என வீதத்தில் உள்ளது. இந்த நிலையில் நாட்டில் கொரோனா 3வது அலை எப்போது உச்சம் அடையும் என்பது பற்றி சென்னை ஐஐடி-யின் கணிதவியல் துறையும் தரவு அறிவியல் சிறப்பு மையமும் கணக்கீட்டு மாடல் மூலமாக கொரோனா பற்றி பகுப்பாய்வு செய்தனர். தற்போது ஆர் வேல்யூ எனப்படும் கொரோனா மொத்த பரவல் விகிதம் 1.57% ஆக இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று அனைத்து மாநிலங்களிலும் இருந்து பெறப்பட்ட பரவல் விகித தரவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆர் வேல்யூ உச்சம் அடையும் என்பதையே உணர்த்துவதாக ஐஐடி தெரிவித்துள்ளது. தம்முடைய கணக்கீட்டின் படி கொரோனா வைரஸ் தொற்று அடுத்த 14 நாட்களில் அதவாது பிப்ரவரி 6ம் தேதிக்குள் உச்சம் அடையும் என்று சென்னை ஐஐடி கூறியுள்ளது. ஏற்கனவே பிப்ரவரி 1 முதல் 15ம் தேதிகளுக்கு இடையே கொரோனா 3வது அலை உச்சம் அடையும் என்று கணிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: