பாரெங்கிலும் வெண்பனி!: வீடுகள், மரங்கள், வாகனங்களை மூடிய பனிப் போர்வை..கடுங்குளிரில் நடுங்கும் வட மாநில மக்கள்..!!

சிம்லா: வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிபொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இமாசலப்பிரதேசத்தில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. பல்வேறு நகரங்களில் சாலைகளில் பல அடுக்கு உறைபனி வியாபித்திருப்பதால் நான்கு தேசிய நெடுஞ்சாலைகளும், 731 சாலைகள் மூடப்பட்டிருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகங்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சிம்லா ரயில் நிலையம் முழுவதுமாக வெண்பட்டால் மூடியது போல காட்சியளிக்கிறது.

தண்டவாளங்களில் படிந்திருக்கும் உறைபனிக்கு நடுவே சென்று வரும் ரயில்கள், சுவிட்சர்லாந்தை நினைவுபடுத்துவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். இமாச்சலில் மழைபோன்று பெய்யும் உறைபனியால் வெளி இடங்களுக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் அறைகளுக்குள் முடங்கி இருக்கிறார்கள். இதனிடையே அடுத்த 2 நாட்களுக்கு இமாச்சலில் பனிப்பொழிவு தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இமாச்சல் போன்றே காஷ்மீர் முழுவதுமாக உறைபனி சூழ்ந்திருப்பதால் நீர் நிலைகள் உறைந்து காணப்படுகின்றன.

உத்தரகாண்ட்டில் உள்ள சமோலி மாவட்டத்தில் கடும் பனி பொழிவு நிலவுகிறது. வீடுகள், வாகனங்கள், மரங்கள் பனி போர்வையால் மூடப்பட்டு கடும் குளிர் நிலவியபோதும் கண்களுக்கு பேரழகாக காட்சியளிக்கின்றன. தலைநகர் டெல்லியில் பனிப்பொழிவு இல்லை என்றாலும் பனிமூட்டத்தால் கடும் குளிர் நிலவுகிறது. இதையடுத்து தலைநகரில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்காக பல்வேறு இடங்களில் குளிர்கால சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

Related Stories: