×

அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய இணையதளத்தில் பதிவு: காஞ்சி கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் பயனடையும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினால் அந்தந்த மாவட்டங்களில் இந்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து கொண்டு நெல் விற்பனை செய்ய ஏதுவாக, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இணையத்தில் சம்பா கொள்முதல் பருவம் 2022ல் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், புல எண் வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை www.tncsc.tn.gov.in அல்லது www.tncsc-edpc.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இணையதளத்தில் எதிர்வரும் சம்பா பருவம் 2022க்கு இணைய வழி பதிவு முறையின் மூலம் பதிவு செய்து விவசாயிகள் தாங்கள் இருக்கும் கிராமங்களின் அருகாமையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தாங்களே தேர்வு செய்து நெல் கொள்முதலுக்கு தேவையான வருவாய் ஆவணங்களை (பட்டா, சிட்டா மற்றும் அடங்கல்) இணையத்தில் பதிவேற்றம் செய்யுமாறும், அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் அனுப்பப்படும்.

விவசாயிகள் தங்களது அலைபேசி எண்ணில் பெறப்பட்ட குறுஞ்செய்தியின் அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து பயன்பெற்று, இந்த இணையவழி பதிவு திட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் ஒத்துழைப்பு நல்கிடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மண்டல மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Kanchi Collector Information , Government Procurement Station, Paddy Marketing, Kanchi Collector
× RELATED 5ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: காஞ்சி கலெக்டர் தகவல்