பொம்மை குடோனில் பயங்கர தீ விபத்து

புழல்: செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் செல்லியம்மன் நகர் பிரதான சாலையில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொம்மை பொருட்கள் குடோன் உள்ளது. இங்கு,  வடமாநிலங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் குடோனின் மேற்பகுதியில் தங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு  இந்த குடோனில் இருந்து, கரும்புகை வெளிவந்தது. சிறிதுநேரத்தில், தீ மளமளவென எரிய ஆரம்பித்தது. இதை பார்த்த அவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.  தகவலறிந்த செங்குன்றம், மணலி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் சுமார் 30  தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து, பத்து மணி நேரம் கடுமையாக போராடி  தீயை அணைத்தனர்.

இதுகுறித்து, செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வடபெரும்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட தனியாருக்கு சொந்தமான தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் குடோன்கள் உள்ளது. இவற்றை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக  ஆய்வு செய்து, குடியிருப்பு பகுதிகளில் அங்கீகாரம் இல்லாத குடோன்கள் எப்படி செயல்படுகிறது? என்பது குறித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: